நெல்லை நகைக்கடை அதிபர் கொலையில் 2 பேர் கைது
நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த நகைக்கடை அதிபர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை,
நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த நகைக்கடை அதிபர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நிலப்பிரச்சினையில் கொலை செய்ததாக கைதானவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்தனர்.
நெல்லை மேலப்பாளையம் ஆமின்புரம் 7–வது தெருவை சேர்ந்தவர் அப்துல் காதர் (வயது 47). இவருடைய மனைவி ஷகிலா பானு. இவர்களுக்கு ரோஷினி என்ற மகளும் உள்ளனர். அப்துல் காதர் நெல்லை டவுன் மேல ரத விதியில் நகைக்கடை நடத்தி வந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக இருந்தார்.இவர் நேற்று முன்தினம் மேலப்பாளையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை டவுனை நோக்கி சென்று கொண்டு இருந்தார். சந்தை முக்கு அருகே வந்து கொண்டு இருந்த போது, பின்னால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அப்துல் காதர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை குலைந்து தடுமாறி கீழே விழுந்த அவர் எழுந்து தம்பி ஓடினார்.
அந்த கும்பல் பின் தொடர்ந்து விரட்டி சென்று அப்துல் காதரை கொலை செய்தது. தகவல் அறிந்து நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுனாசிங் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மேலப்பாளையம் ஆமின்புரம் 7–வது தொருவை சேர்ந்த குத்புதீன் (40), அதே பகுதியை சேர்ந்த கிதர் மைதீன் (36) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.அவர்கள் கொடுத்த வாக்குமூலம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:–
அப்துல் காதலின் சொந்த ஊர் நெல்லை டவுன் கரிக்காத்தோப்பு ஆகும். அங்கு சில பிரச்சினைகள் இருந்ததால் மேலப்பாளையத்தில் குடியேறினார். அப்துல் காதர் நகை கடை மட்டும் அல்லாமல் ரியஸ் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். நிலம் வங்குவதுதொடர்பாக எங்களுக்குள் பிரச்சினை இருந்து வந்தது. மேலப்பாளையம் சந்தை முக்கில் அப்துல் காதருக்கு 8½ சென்ட் நிலைம் உள்ளது. இந்த நிலத்தை நாங்கள் ஏற்கனவே கேட்டு இருந்தோம். இந்த நில பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டு மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கில் அப்துல் காதர் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். அதன் பிறகும் எங்களுக்கு நிலத்தகராறு, கமிஷன் பிரச்சினை இருந்தது.
அப்துல்காதரை பல முறை கொலை செய்ய முயற்சி செய்ய சதி திட்டம் தீட்டினோம். இதை தெரிந்து கொண்டு அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதை தொடர்ந்து அப்துல் காதருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதனால் எங்களுடைய சதி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. சமீபத்தில் தான் போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டது. தொடர்ந்து அவரை நோட்டமிட்டு வந்தோம். அப்துல்காதல் மேலப்பாளையம் ரவுண்டானா வழியாக செல்வதை தெரிந்து கொண்டு நாங்கள் மோட்டார் சைக்கிளை மோத விட்டு கொலை செய்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.