குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் காயம்
குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் காயம் அடைந்தனர்.
கோவில்பட்டி,
நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர்கள் வினோத்குமார் (வயது 24), ஜான்சன் (24), சுபின் (24), ஆல்வின் (24). நண்பர்களான இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவில் நாகப்பட்டினத்தில் விபத்தில் காயம் அடைந்த நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக காரில் புறப்பட்டு சென்றனர். இரவு 12.15 மணி அளவில் கோவில்பட்டி அருகே இடைசெவலை கடந்து கோபாலபுரம் விலக்கு அருகில் சென்றபோது, சாலையோரம் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த வினோத்குமார் உள்ளிட்ட 4 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், நாலாட்டின்புத்தூர் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் விக்டோரியா அற்புதராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.