வரமாக வரும் செயற்கை உறுப்புகள்!


வரமாக வரும் செயற்கை உறுப்புகள்!
x
தினத்தந்தி 11 July 2017 1:24 PM IST (Updated: 11 July 2017 1:24 PM IST)
t-max-icont-min-icon

இயற்கையாக வளராத உறுப்புகளை செயற்கையாக வளர்த்துப் பொருத்திக் கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி கண்டுவிட்டான் மனிதன்.

னிதனின் உடல் உறுப்புகள் மீண்டும் வளரும் இயற்கை பண்பை பெற்றிருக்கவில்லை. பல்லிகள் மற்றும் சில உயிரினங்களைப் போல இழந்த உறுப்புகள் மீண்டும் வளர்ந்துவிடும் என்றால் உலகம் முழுவதும் கோடிக் கணக்கானவர்கள் ஊனத்திற்குள் முடங்கிப் போயிருக்க மாட்டார்கள். கை இல்லாதவர்கள் கால்களை கைகளாக பயன்படுத்துவதைப்போல, இயற்கையாக வளராத உறுப்புகளை செயற்கையாக வளர்த்துப் பொருத்திக் கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி கண்டுவிட்டான் மனிதன். இதுவரை 12 உடல் உறுப்புகளை செயற்கையாக ஆய்வகத்தில் வளர்த்து எடுத்து அசத்தியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். லட்சக்கணக்கானவர்களின் மறுவாழ்வுக்கு துணை செய்ய வந்திருக்கும் அந்த உறுப்புகளை அறிவோமா...

காதுகள் : கண்களைப்போலவே காதுகளும் வாழ்க்கைக்கு மிக முக்கியமான உறுப்பு. முக அழகிற்கும் காதுகள் முக்கியம். கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செயற்கை காதுவடிவ பொருளில் இயற்கையான காது செல்களை வளர வைத்து நிஜ காதுகளைப் போலவே செயற்கை காதுகளை தயாரித்து இருக்கிறார்கள். எலிகளுக்கு இந்த செயற்கை காதுகள் வெற்றிகரமாக பொருத்தி சோதிக்கப்பட்டுவிட்டது.

மூச்சுக்குழல்: மூச்சுக்குழலும் செயற்கையாக உருவாக்கப்பட்டுவிட்டது. ஸ்டெம் செல்களில் இருந்து வளர்க்கப்பட்ட மூச்சுக்குழல் நோயாளி ஒருவருக்கும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. சுவீடனைச் சேர்ந்த பாலோ மாக்சியரினி என்ற மருத்துவர் இந்த செயற்கை மூச்சுக்குழலை வெற்றிகரமாக வளர்த்தெடுத்தவர் ஆவார்.

சிறுநீர்ப்பை: சிறுநீர்ப்பையை ஆய்வகத்தில் வெற்றிகரமாக உருவாக்கியவர்கள் அமெரிக்காவின், வேக் பாரஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளாவர். நோயாளியிடம் இருந்து ஸ்டெம் செல்களைப் பெற்று இந்த சிறுநீர்ப்பை உருவாக்கப்பட்டது. 2006-ல் உருவாக்கப்பட்ட செயற்கை சிறுநீரகப்பை அந்த வருடமே 7 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இதை வளர்த்தெடுக்க 7 வார காலம் பிடித்தது. சிறுநீரக பையின் ஸ்டெம் செல்கள் அல்லாமல், எலும்பு மஜ்ஜை செல்களில் இருந்தும் சிறுநீரகப் பை தயாரிக்கும் முறை 2010-ல் கண்டறியப்பட்டு உள்ளது.

எலும்புகள் : அமெரிக்காவில் மட்டும் ஆண்டிற்கு 20 லட்சம் பேருக்கு எலும்புகள் தேவைப்படுகிறது. உடலுக்கு உறுதி தரும் எலும்புகளை மற்றவர்களிடம் இருந்து தானமாக பெறுவது சிரமமானது. சில எலும்புகளை தானமாக பெற முடிவதில்லை. இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில், இஸ்ரேலை சேர்ந்த ‘போனஸ் பையோகுருப்’ நிறுவனத்தினர் ஸ்டெம் செல் மூலம் செயற்கை எலும்புகளை வெற்றிகரமாக உருவாக்கினர். கொழுப்பு திசுக்களில் இருந்து எலும்புகளுக்கான ஸ்டெம் செல்களை பெற முடிவது சிறப்பு.

கல்லீரல் : உடலில் அதிகமான பணிகளைச் செய்யும் கல்லீரல் ஓரளவுக்கு தன்னை மறுசீரமைப்பு செய்து கொள்ளக்கூடியது. இருந்தாலும், ஜீரண திரவம் உள்ளிட்ட முக்கிய ரசாயனங்களை உருவாக்கும் கல்லீரலின் செயல்பாடுகள் குறைந்தால் மனிதன் பலவிதமான பின்விளைவுகளை எதிர்கொள்வான். கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் பெரும்பாலும் தோல்வியை தழுவி உள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வகத்தில் ஈரல் மொட்டுகளை உருவாக்கினர். இதை எலிகளில் பொருத்தி, கல்லீரலின் பணியை செய்வதையும் உறுதி செய்துள்ளனர். ஆனால் ஸ்டெம் செல்கள் மூலம் உருவாக்கப்படாத இந்த செயற்கை கல்லீரலை இதுவரை மனிதர் களுக்குப் பயன்படுத்த முடியவில்லை.

சிறுநீரகம் : செயற்கை சிறு நீரகத்தை உருவாக்கிய பெருமை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளைச் சாரும். 2013-ல் உருவாக்கப்பட்ட இந்தக் கருவி மனித சிறுநீரகத்தைப் போல முழுமையாக செயல்படாவிட்டாலும் ஆயிரக்கணக் கானவர்களின் ஆபத்பாந்த வனாக விளங்கியது. தொடர் ஆராய்ச்சிகளால் அமெரிக்காவின் மாஸாசுசெட்ஸ் பொது மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் நன்றாக செயல்படும் செயற்கை சிறுநீரகத்தை உருவாக்கிவிட்டனர். இது ரத்தத்தில் இருந்து கழிவுகளை சிறுநீராக துரிதமாக பிரித்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

மார்புத்திசு: மார்பக புற்றுநோயால் அவதிப் படுபவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை உருவாக்கும் வகையில், கடந்த 2015-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது செயற்கை மார்பகத் திசு. ஜெர்மனியைச் சேர்ந்த ஹெல்ம்ஹோல்ட்ஸ் மைய ஆராய்ச்சியாளர்கள் இதை உருவாக்கினார்கள்.

பிட்யூட்டரி சுரப்பி: சுரப்பிகளின் தலைவன் எனப்படுவது பிட்யூட்டரி சுரப்பி. மூளையின் அடியில் அமைந்துள்ள இந்த சுரப்பி உடல் வளர்ச்சி, ரத்த அழுத்தம், வளர்ச்சிதை மாற்றம், மற்ற சுரப்பிகளின் கட்டுப்பாடு என பல்வேறு பணிகளைச் செய்கிறது. முக்கியமான இந்த சுரப்பியை ஆய்வகத்தில் வளர்த்தெடுத்தவர்கள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள். எலிகளில் வெற்றிகரமாக செயல்படுகிறது இந்த சுரப்பி. மனிதர்களுக்கு உதவும் பிட்யூட்டரி சுரப்பியை ஸ்டெம்செல் மூலம் வளர்க்கும் ஆராய்ச்சியில் ஜப்பானை சேர்ந்த யாசிகி சசாய் தலைமையிலான ஆய்வுக்குழு ஈடுபட்டுள்ளது.

கண் : விஞ்ஞானி சசாகியின் ஆய்வுக்குழு செயற்கை கருவிழி தயாரிப்பிலும் ஈடுபடுகிறது. அவர்கள் ஸ்டெம்செல் மூலம் விழித்திரைக்கு நிகரான செயற்கை உறுப்பை உருவாக்கிவிட்டனர். நம்பிக்கைக்குரிய இந்த முயற்சி, பார்வை தரும் அளவுக்கு வளர்ச்சி காண இன்னும் சில காலம் பிடிக்கும்.

வயிறு: அமெரிக்காவின் சின்சினாட்டி குழந்தைகள் மருத்துவமனை ஆய்வாளர்கள் செயற்கை வயிறை உருவாக்கி உள்ளனர். அஜீரண கோளாறு - புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 கோடி அமெரிக்கர்களுக்கு செயற்கை வயிறு நிவாரணமாக அமையும் என்று அவர்கள் கூறி உள்ளனர்.

செயல்பாட்டிற்கு வரட்டும் செயற்கை உறுப்புகள்! 

Next Story