மனிதனால் செவ்வாய் கிரகத்தில் வாழ முடியுமா?


மனிதனால் செவ்வாய் கிரகத்தில் வாழ முடியுமா?
x
தினத்தந்தி 11 July 2017 1:33 PM IST (Updated: 11 July 2017 1:33 PM IST)
t-max-icont-min-icon

தற்போது பருவநிலை உள்ளிட்ட காரணங்களால் மனிதன் பூமியை விட்டு வெளியேறி செவ்வாய் போன்ற பிற கிரகங்களில் சென்று வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

‘ஆசையே துன்பத்துக்குக் காரணம், அதனால் ஆசைகளை துறந்துவிடு’ என்றார் புத்தர்.

ஆனால், ‘ஆசையே அலைபோலே, நாமெல்லாம் அதன்மேலே... அதனால் ஆசைப்படு’ என்று பாடினார் கவிஞர் கண்ணதாசன்.

ஆசையே இல்லாமல் வாழ்வது மனிதர்களால் சாத்தியம் இல்லை. அதீத ஆசை கொண்ட வாழ்க்கையும் மிகவும் ஆபத்தானது. மாறாக, ஆசைகளை நமது கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் சாமர்த்தியமான வாழ்க்கைதான் சிறந்தது.

உதாரணமாக, மனிதன் முதலில் பறவைகள் போல விண்ணில் பறந்து செல்ல ஆசைப்பட்டான். அதன் விளைவாக, விமானம், ராக்கெட், விண்கலன்கள் மற்றும் செயற்கைக் கோள்கள் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மனிதன் விண் வெளிக்குச்சென்று நட்சத்திர மண்டலங்கள், கிரகங்கள், நிலவுகள் ஆகியவற்றை கண்டறிந்தான்.

தற்போது பருவநிலை உள்ளிட்ட காரணங்களால் மனிதன் பூமியை விட்டு வெளியேறி செவ்வாய் போன்ற பிற கிரகங்களில் சென்று வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ‘நாசா’ ஆய்வு மையம் இன்னும் 20 வருடங்களில் செவ்வாயில் குடியேற முடியும் என்று அறிவித்துள்ளது. உலகின் பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் செவ்வாயில் குடியேறும் வாய்ப்புகளை விளம்பரப்படுத்தி பயணச்சீட்டை விற்பனை செய்து வருகின்றன. பல லட்சம் கோடீசுவரர்கள் இதற்காக முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர்.

இந்தநிலையில், செவ்வாயில் மனித வாழ்க்கையானது சாத்தியமானாலும், அங்கு சென்று வாழும் உடல் தகுதி மனிதனுக்கு உள்ளதா? என்ற அடிப்படையான கேள்விக்கு முதலில் விடையளிக்க வேண்டியது அவசியமாகிறது.

முதலில், விண்வெளியில் இருக்கக் கூடிய அதீத ஈர்ப்பு விசைகளை (g forces) மனிதன் தாண்டிச் சென்றாக வேண்டும். உதாரணமாக, பூமியில் உள்ள புவி ஈர்ப்பு விசையை விட மூன்று மடங்கு அதிகமான ஈர்ப்பு விசையை தாங்கக்கூடிய சக்தி வேண்டும். இல்லையென்றால் அழுத்தம் காரணமாக பலர் மூர்ச்சையாகி விடுவார்கள்.

சரி, ஒரு வேளை ஈர்ப்பு விசைகளை வெற்றிகரமாக தாண்டிவிட்டாலும் அடுத்ததாக, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய மற்றும் நரம்பு மண்டலத்தைக் பாதிக்கக்கூடிய சக்தி வாய்ந்த சூரியக் கதிர்களை சந்தித்தாக வேண்டும். ஆக எப்படிப் பார்த்தாலும் பயணம் ரணகளமாகத்தான் இருக்கப் போகிறது.

சரி, இதற்கு அடுத்த சிக்கல், ஆபத்து என்ன என்று பார்த்தால், ஒரு சிறிய விண்கலத்துக்கு உள்ளே சுமார் 150 நாட்கள் பயணம் செய்தால்தான் செவ்வாயைச் சென்றடைய முடியும். மிக முக்கியமாக, இந்த 150 நாள் பயணத்துக்காக நம்முடைய பித்தப்பை மற்றும் குடல்வால் (appe-ndix) ஆகிய இரண்டையும் நீக்கிவிட வேண்டும். இல்லையென்றால், விண்வெளியின் அழுத்த மாற்றங்கள், நுண் ஈர்ப்பு விசை (microgravity) ஆகியவை இரண்டும் இவ்விரு உடல் பாகங்களை கிழித்து, தலைவலி, பார்வை இழப்பு மற்றும் அஜீரணம் ஆகியவற்றை ஏற்படுத்திவிடும்.

இது தவிர, நுண் ஈர்ப்பு விசை காரணமாக நம்முடைய எலும்பின் தாதுக்கள் மற்றும் அடர்த்தி ஆகியவை மாதம் 1 சதவீதம் அளவு தொடர்ந்து குறைந்துகொண்டே வரும். இதைத் தவிர்க்க ஒரு நாளைக்கு 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்தாக வேண்டும். ஒரு வேளை, இவை அனைத்தையும் வெற்றிகரமாகத் தாண்டி செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து விட்டோம் என்றே வைத்துக்கொள்வோம். செவ்வாயின் வெப்பம் சுமார் 140 டிகிரி முதல் 30 டிகிரி வரை இருக்கும். ஆனால் பிரச்சினை வெப்பத்தினால் வராது. மாறாக சூரியக் கதிர்களால் தான் ஆபத்து.

சுற்றுச்சூழல் அழுத்தம் இல்லாமை மற்றும் சூரியக் கதிர்களால் ரத்தம் கொதிப்பது மற்றும் உடல் பாகங்கள் கிழிந்துபோவதைத் தவிர்க்க, விண்வெளி உடையோடுதான் வாழ்ந்தாக வேண்டும். இவற்றை எல்லாம் விட மிக முக்கியமாக, செவ்வாயில் உணவுப்பயிர்களை வெற்றிகரமாக வளர்த்தெடுக்கும் வரை உறைய வைத்து உலர்த்தப்பட்ட சுவை குறைந்த உணவைத்தான் சாப்பிட்டாக வேண்டும்.

ஆக மொத்தத்தில், செவ்வாயில் வாழ கோடீசுவரனாக இருந்தால் மட்டும் போதாது, அதீத சக்திகளுடன் கூடிய பிரத்யேகமான உடல் தகுதியும் வேண்டும். அது இருந்தால் தான் செவ்வாய் பயணம் வெற்றிகரமாக அமையும். 

Next Story