குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா


குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா
x
தினத்தந்தி 12 July 2017 3:45 AM IST (Updated: 12 July 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆனி கொடை விழா கடந்த 9–ந்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் காலையில் அம்மனுக்கு தங்க திருமேனி சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.

விழாவின் சிகர நாளான நேற்று ஆனி கொடை விழா நடந்தது. காலையில் அம்மனுக்கு தங்க திருமேனி அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. மதியம் கோவைவாழ் குரங்கணி இளைஞர்கள் நண்பர்கள் குழுவினரால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நேர்த்திக்கடன்

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக மாவிளக்கு பார்த்தல், மரக்கட்டையாலான கை, கால்களை வாங்கி, அவற்றில் பூக்களை சுற்றி காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். மாலையில் பக்தி சொற்பொழிவு, சிறப்பு நாதசுவர கச்சேரி, இரவில் இன்னிசை பாட்டு பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், விரதம் இருந்து வரும் பக்தர்கள் கயிறு சுற்றி ஆடியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் மாவிளக்கு பெட்டி, முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டனர்.

நாராயணர் வீதி உலா

இரவு 12 மணிக்கு சாம பூஜை நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கை நடந்தது. இரவு 1 மணிக்கு நாராயணர், பாமா, ருக்மணியுடன் சப்பரத்தில் எழுந்தருளி, குரங்கணி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கோவில் அருகிலும், தாமிரபரணி ஆற்றங்கரையிலும் பனை ஓலைகளால் தடுப்பு அமைத்து தங்கியிருந்து வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. பல்வேறு ஊர்களில் இருந்தும் குரங்கணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தீபு, ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா தலைமையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் அஜித், உதவி ஆணையரும் தக்காருமான அன்னக்கொடி, தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் சிவராம் பிரபு, குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர், கோவைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் ஊர் மக்கள் செய்து இருந்தனர்.



Next Story