குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 July 2017 3:45 AM IST (Updated: 12 July 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே கொண்டங்கி கிராமத்தில் மேல்நிலை ஆழ்துளை கிணறு மற்றும் நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்ததாலும், வறட்சி காரணமாகவும் கிணற்றின் நீர்மட்டம் குறைந்து போனதால் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் குடிநீர் கிடைக்காமல் அந்த கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீருக்காக வெகுதூரம் கால்கடுக்க நடந்தே சென்று வயல்வெளிகளில் தண்ணீர் பிடித்து வரும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த கொண்டங்கி கிராம மக்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திடீரென இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் அனைவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story