கள்ளக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே உள்ளது புக்கரவாரி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள வானவரெட்டி, பெரியசிறுவத்தூர், வரதப்பனூர், சிறுமங்கலம், பெருமங்கலம், லட்சியம், காட்டனந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மதுபிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மது அருந்திவிட்டு செல்கின்றனர். அவ்வாறு மதுஅருந்துபவர்கள் போதை தலைக்கேறியதும், வீண் தகராறில் ஈடுபடுகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்களை கேலி, கிண்டல் செய்கின்றனர். இதனால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.
இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடையில் மதுவிற்பனை நடைபெற்று வந்தது. இதனால் ஆத்திரமடைந்த புக்கரவாரி கிராம மக்கள் நேற்று காலை அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவதற்காக வானவரெட்டி–புக்கரவாரி சந்திப்பு சாலையில் ஒன்று திரண்டு வந்தனர்.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், இன்ஸ்பெக்டர்கள் கள்ளக்குறிச்சி(பொறுப்பு) மணிமாறன், சின்னசேலம் கார்த்திகேயன் மற்றும் போலீசார், இரும்பு தடுப்பு கட்டை அமைத்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் புக்கரவாரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் கிராம மக்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த டாஸ்மாக் கடைக்கு மது அருந்தபவர்களால் இப்பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் அதிகளவில் நடக்கின்றன. எனவே இந்த டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்றனர். பின்னர் போலீசார் கூறுகையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி கடை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையேற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.