சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கலெக்டர், அதிகாரிகள் ஆலோசனை


சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கலெக்டர், அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 12 July 2017 4:00 AM IST (Updated: 12 July 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடர்பாக கலெக்டர் சந்தீப் நந்தூரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 22–ந் தேதி தொடங்கி 27–ந் தேதி வரை நடக்கிறது. விழாவுக்கு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை விழாவுக்கு, நெல்லை மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். பக்தர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்குவதால் அவர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்ய வேண்டும். குடிநீர் வசதிக்காக பெரிய அளவிலான தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும். தற்காலிக கழிப்பிடங்களை அமைக்க வேண்டும்.

ஏற்கனவே கோவில் பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்க வேண்டும். பெரிய அளவிலான குப்பை தொட்டிகளை வைத்து, விரைவாக குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு தற்காலிக வாகன நிறுத்துமிடங்களை அமைக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள்

கோவில் வளாக பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் விழாவிற்கு வந்து செல்லுவதற்கு வசதியாக அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் ஆகாஷ் (சேரன்மாதேவி) மைதிலி (நெல்லை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் பரஞ்சோதி, சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சாத்தையா, ஆய்வாளர் சீதாலெட்சுமி, சொரிமுத்து அய்யனார் கோவில் செயல் அலுவலர் தங்கபாண்டியன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Next Story