ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சிறு, குறுந்தொழில்கள் கடும் பாதிப்பு ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி


ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சிறு, குறுந்தொழில்கள் கடும் பாதிப்பு ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 12 July 2017 4:30 AM IST (Updated: 12 July 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தமிழ்நாட்டில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் கடும் பாதிப்படைந்துள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்த கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பின்னர் ஓசூர் ஆர்.கே.மகாலில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவிற்கு சென்று அங்குள்ள அரங்குகளை பார்வையிட்டார். ‘தினத்தந்தி’ சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு சென்று புத்தகங்களை பார்வையிட்டார். அப்போது புத்தக திருவிழாவின் தலைவர் துரை, ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், துணைத்தலைவர் சீனிவாசுலு ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் சிறுபான்மை பயங்கரவாதம் நடைபெற்று வருவதாகவும், மோசமான நிலை உருவாகி வருவதாகவும் பேசி வருகிறார்.

பயங்கரவாதம் அல்லது வகுப்புவாதம் எந்த அடிப்படையில் வெளிப்பட்டாலும் அதை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுப்பது மாநில அரசின் பொறுப்பாகும்.

ஜி.எஸ்.டி. வரி ஏழை, எளிய மக்களுக்கு நலன் தரும் என்றார் பிரதமர் மோடி. பலமுனை வரிகள் ரத்து செய்யப்பட்டு ஜி.எஸ்.டி. வரியான பிறகு ஓட்டல்களில் உணவு வகைகளின் விலை உயர்ந்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் சிறு மற்றும் குறுந்தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் அளவிற்கு ஜி.எஸ்.டி. வரி உள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 14-ந் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்குவது, கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது தொடர்கதையாகி விட்டது. பேச்சுவார்த்தை மூலமாக இந்திய அரசு, இலங்கை அரசு மற்றும் தமிழக அரசின் மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமே தவிர, இலங்கை அரசு கொண்டு வந்துள்ள சட்டம் சரியானதல்ல, ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.

தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு மத்திய அரசு மற்றும் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி தி,மு.க., தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு , விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

Next Story