ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்து கிணறு பிரச்சினை: ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் தோல்வி
ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்து கிணறு பிரச்சினை: ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் தோல்வி
பெரியகுளம்,
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சியில், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்தில் புதிதாக கிணறு வெட்டப்பட்ட விவகாரத்தில் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ. (பொறுப்பு) கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்மாவதி மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிராம மக்கள் சார்பில் ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயபாலன் மற்றும் சிலரும், ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் அவருடைய உறவினர்கள் சந்திரசேகரன், சுப்புராஜ், சின்னச்சாமி உள்பட சிலரும் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து பொதுமக்கள் சார்பில் கலந்துகொண்டவர்கள் கூட்டத்தைவிட்டு வெளியேறினர். இதனால் கூட்டம் எந்த முடிவும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.
இது குறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் கூறுகையில், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். இது குறித்து கிராம மக்களிடம் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம் என்றனர். முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் கலந்துகொண்ட உறவினர்கள் கூறுகையில், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான இடத்தில் ஒரு கிணறு மட்டுமே உள்ளது. அந்த கிணற்றில் இருக்கும் தண்ணீரை பொதுமக்களுக்கு கொடுக்க தயாராக உள்ளோம். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக ஓ.பன்னீர்செல்வத்தின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர் மக்களை தூண்டிவிடுகின்றனர் என்றனர்.