பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் படுக்கையில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளி


பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் படுக்கையில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளி
x
தினத்தந்தி 12 July 2017 4:30 AM IST (Updated: 12 July 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

தென்தாமரைகுளம் அருகே பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் படுக்கையில் ரத்தக்காயங்களுடன் தொழிலாளி பிணமாக கிடந்தார். வடமாநிலத்தைச் சேர்ந்த அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்தாமரைகுளம்,

குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே உள்ள ஆண்டிவிளையைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான செங்கல்சூளை பொற்றையடி அருகில் உள்ள கரம்பவிளையில் உள்ளது. அந்த செங்கல்சூளையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா பகுதியில் பாத்பாரா கிராமத்தைச் சேர்ந்த சன்யாசி சர்தார் (வயது 37) என்பவர் அங்கு கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி கல்பனா. இவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் தனி வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்தாரின் மனைவி சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அதனால் சர்தார் மட்டும் வீட்டில் தனியாக தங்கியிருந்து செங்கல்சூளை வேலைக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக சர்தார் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவரது வீட்டில் வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சர்தார் வெளியூருக்கு சென்று இருக்கலாம் என அவருடன் வேலை செய்தவர்கள் நினைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் சர்தார் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. படுக்கையில் சர்தார் பிணமாக கிடந்தார். அவரது வாயில் இருந்தும், மூக்கில் இருந்தும் ரத்தம் வழிந்து உறைந்து போய் இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு வேனுகோபால் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்த சர்தாரின் உடல் பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்தார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் அவர் வெளிப்புறமாக பூட்டி இருந்த வீட்டுக்குள் பிணமாக கிடந்தது போலீசாருக்கு வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Related Tags :
Next Story