மக்கள்தொகை பெருகினால் அடிப்படை வசதிகள் கிடைக்காது கலெக்டர் பேச்சு


மக்கள்தொகை பெருகினால் அடிப்படை வசதிகள் கிடைக்காது கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 12 July 2017 4:30 AM IST (Updated: 12 July 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொகை பெருகினால் அடிப்படை வசதிகள் கிடைக்காது. எனவே பெருகிவரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்த இளைஞர்கள் உறுதி ஏற்கவேண்டும் என்று கலெக்டர் ராமன் பேசினார்.

வேலூர்,

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு வேலூரில் நேற்று தமிழ்நாடு அரசு குடும்பநலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது. அண்ணா கலையரங்கம் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச்சென்றனர்.

ஊர்வலம் அண்ணாசாலை வழியாக சென்று ஊரீசு கல்லூரியை அடைந்தது. அங்கு மக்கள்தொகை பற்றிய கருத்தரங்கம் நடந்தது. மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கலிவரதன் வரவேற்றார். குடும்ப நலத்துறை துணை இயக்குனர் சாந்தி திட்ட விளக்கவுரையாற்றினார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ், ஊரீசு கல்லூரி முதல்வர் ஸ்டான்லி ஜோன்ஸ் கருணாகரன் ஆகியோரும் பேசினர்.

கலெக்டர் ராமன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மக்கள்தொகை குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள்தொகை பெருக்கத்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இன மக்கள் வசிக்கின்றனர். மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் 40 லட்சம் மக்கள் உள்ளனர். சராசரியாக மக்கள்தொகை பெருக்கம் 10 புள்ளிகளாக இருக்கும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் 12 புள்ளியாக இருக்கிறது. இதை நாம் 10 புள்ளிகளாக குறைக்க வேண்டும்.

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் இயல்பு இன்னும் மாறாமல் உள்ளது. ஒரு காலத்தில் கட்டாய கருத்தடை இருந்தது. தற்போது அது கைவிடப்பட்டு விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மக்கள் தொகை சில நாடுகளின் மக்கள்தொகைக்கு இணையாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள்தொகை பிரான்ஸ் நாட்டு மக்கள் தொகைக்கு இணையாக இருக்கிறது. இப்படி மக்கள்தொகை பெருகினால் நமக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காது. தினமும் பிரச்சினைகளைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது அரசின் கடமையாக இருந்தாலும், மக்கள்தொகை பெருக்கம் சீராக இருந்தால்தான் அது சாத்தியமாகும். சிறிய நாடான ஜப்பானில் கொசு, கரப்பான் பூச்சி கிடையாது. தெருக்குழாயில் தண்ணீர்குடிக்கலாம், அவ்வளவு சுகாதாரமாக இருக்கிறது. மக்கள்தொகை குறைவாக இருப்பதால் அவர்களுக்கு இது சாத்தியமாகிறது.

நமது நாட்டில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. அதை தகர்க்க மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும். திருமணத்திற்கு முன்பு தவறான பாதைக்கு செல்லாமல் திருமணத்திற்கு பிறகு ஒழுக்கமான வாழ்க்கையை கடைபிடித்தாலே மக்கள்தொகை பெருக்கம் கட்டுப்படும். மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த இளைஞர்கள் உறுதி ஏற்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

துணை இயக்குனர் (தொழுநோய்) அப்சல்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மக்கள் கல்வி தகவல் அலுவலர் லோகநாதன் நன்றி கூறினார். 

Related Tags :
Next Story