காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
x
தினத்தந்தி 12 July 2017 4:30 AM IST (Updated: 12 July 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பா.ஜனதா மேல்சபை எம்.பி.யும், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் கூறினார்.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரை தமிழகத்திற்கு பெற வேண்டும் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இருமாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு குறித்து ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி அவரவர்களுக்கு உரிய தண்ணீரை அளிக்க வேண்டும். ஆனால் கர்நாடகம் மழை இல்லாத நேரங்களில் எங்களுக்கு வறட்சியாக உள்ளது என்றும், தண்ணீர் அதிகம் வரும் நேரங்களில் திறந்து விடுவதும் ஒப்பந்தத்திற்கு அழகல்ல.

பா.ஜனதா கட்சி அமைப்பு ரீதியாக விஸ்தரிப்பு பணியை தொடக்க காலத்தில் இருந்தே அன்றாட பணி போல் செய்து வருகிறது. இதை விஸ்தார் யோஜனா என்று கூறுவார்கள். ஒரு ஆண்டில் அனைத்து உறுப்பினர்களும் வெவ்வேறு இடங்களில் தலா 2 நாட்கள் வீதம் 11 நாட்கள் தங்கி கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

இதன்அடிப்படையில் மத்திய பிரதேசம் சென்று வந்தேன். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஏலகிரி மலையில் 2 நாட்கள் தங்கி விட்டு தற்போது மேட்டூர் வந்துள்ளேன். மேட்டூரில் 2 நாட்கள் தங்கி 2 வாக்குச்சாவடிகள் அடங்கிய பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.

தமிழகத்தில் பா.ஜனதா கால் ஊன்றி பீடு நடைபோட்டு நடந்து வருகிறது. விரைவில் வெற்றி விழாவுக்கான கால்கோள் நடும் நிகழ்ச்சி நடத்தும் வகையில் அரசியல் சூழல் ஏற்படும். வேறு கட்சி தலைவர் மறைவு, சிறைவாசம், கட்சி பிளவு போன்ற பலவீனத்தை பயன்படுத்தி வளரும் கட்சி பா.ஜனதா அல்ல. எங்களின் சாதனையை சொல்லி கட்சியை வளர்ப்போம்.


Related Tags :
Next Story