காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு


காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 12 July 2017 4:15 AM IST (Updated: 12 July 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை தாலுகாவில் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்து வரும் சுகாதார பணிகளை கலெக்டர் கதிரவன் நேரில் ஆய்வு செய்தார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி அருகே உள்ளது நாட்றாம்பாளையம். இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 27 வயதுடைய வாலிபர் ஒருவருக்கு காய்ச்சல் வந்தது. அவர் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் அவருக்கு டெங்கு, வைரஸ், மலேரியா, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல் இருக்கிறதா? என்று மருத்துவர்கள் பரிசோதித்தனர். இதில் எதுவும் இல்லை என்ற போதிலும், அவருக்கு காய்ச்சல் குணமடையவில்லை.

இதனால் அந்த வாலிபரின் ரத்தம், சிறுநீர் ஆகியவை பரிசோதனைக்காக புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் அந்த வாலிபருக்கு ஜிகா வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் 3 பேர் ஜிகா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வதாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்ட வாலிபர் ஜிகா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை தாலுகா நாட்றாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பத்திகவுண்டனூர், என்.புதூர், நாட்றாம்பாளையம், பஞ்சல்துறை, வாஞ்சி நாதபுரம், அட்டப்பள்ளம் ஆகிய கிராமங்களில் காய்ச்சல் நோய் தடுப்பு சுகாதார பணிகள் நடந்து வருகிறது. இதை மாவட்ட கலெக்டர் கதிரவன் நேற்று பார்வையிட்டார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


அஞ்செட்டி தாலுகா நாட்றாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து 8 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் 6 மருத்துவர்கள், 12 சுகாதார ஆய்வாளர்கள், 22 மஸ்தூர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளனர். வீடுகளுக்கு அவர்கள் நேரடியாக சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

மேலும் நீர் தேங்கும் இடங்களில் கொசு மருந்து தெளித்தல், கொசு ஒழிப்பு புகைப்பான் மூலம் மருந்து தெளித்தல், கழிவுநீர் கால்வாய்களை சுகாதாரமாக பராமரித்தல் போன்ற விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.

இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சச்ரிதா, ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவா, சந்தானம் மற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story