பழனி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


பழனி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 July 2017 3:30 AM IST (Updated: 12 July 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே 4 மாதங்களாக குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பழனி

பழனி நகராட்சியை அடுத்துள்ளது கோதைமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கோதைமங்கலம், கொத்தனார் காலனி, சூசைநகர், ஆர்.எம்.கே.நகர், அரிமாநகர், கணபதிநகர், சாமுண்டிபுரம், கருப்பணகவுண்டன்வலசு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ளன. இப்பகுதி மக்களுக்கு சண்முகநதியில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யாததால் சண்முகநதி தண்ணீரின்றி வறண்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீரை ஒரு குடம் ரூ.3–க்கு வாங்கி பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கணபதிநகர், ஜவஹர்நகர், ஆர்.எம்.கே.நகர் பகுதி மக்கள் பழனி– புதுதாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாவட்ட கலெக்டர் எடுத்துரைத்து லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story