மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதி


மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதி
x
தினத்தந்தி 12 July 2017 4:45 AM IST (Updated: 12 July 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

முசிறி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சேந்தமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகள் ஐஸ்வர்யா(வயது 13). இவர் அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சுப்பிரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது தாய் போதும்பொண்ணு பராமரிப்பில் அவர் வளர்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் ஐஸ்வர்யாவிற்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஐஸ்வர்யா பின்னர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா நேற்று பரிதாபமாக இறந்தார்.

மேலும் சேந்தமாங்குடி மற்றும் அந்தரப்பட்டி கிராமங்களில் மர்ம காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். இந்த மர்ம காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் பலர் முசிறி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரமான குடிநீர் வழங்காததே மர்ம காய்ச்சலுக்கு காரணமாக இருக்கலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மர்ம காய்ச்சலால் 8-ம் வகுப்பு மாணவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


Related Tags :
Next Story