‘ரூ.6 ஆயிரத்திற்காக கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை’ நடிகை கிருத்திகா சவுத்ரியின் தம்பி சந்தேகம்
‘ரூ.6 ஆயிரத்திற்காக கொலை நடந்து இருக்க வாய்ப்பில்லை’ என நடிகை கிருத்திகா சவுத்ரியின் தம்பி தீபக் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தவர் நடிகை கிருத்திகா சவுத்ரி(வயது27). கடந்த மாதம் 12–ந்தேதி வீட்டில் அழுகிய நிலையில் நடிகையின் உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் நடிகை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் நடிகையின் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்கள் என சுமார் 500–க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரித்தனர். ஆனால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
2 பேர் கைதுஇந்தநிலையில் நடிகை வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது நடிகை பிணமாக மீட்கப்பட்ட சில நாட்களுக்கு முன் 2 பேர் அவரது வீட்டிற்கு வந்து சென்றதாக கூறினார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த 2 பேரும் போதைப்பொருள் விற்பனை செய்யும் ஷகில் நசீம்கான்(வயது33), பாசுதாஸ்(40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி சென்றபோது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது.
இந்தநிலையில் போலீசார் நேற்று முன்தினம் அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்து இருவரையும் கைது செய்தனர்.
ரூ.6 ஆயிரத்திற்காக...இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:–
நடிகை கிருத்திகா சவுத்ரி கொலையாளிகள் 2 பேரிடமும் வழக்கமாக போதைப்பொருள் வாங்கி வந்துள்ளார். இந்தநிலையில் அவர் கொலையாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் பாக்கி வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நடிகையை கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் இதை நடிகையின் குடும்பத்தினர் மறுத்து உள்ளனர்.
காரணத்தை கண்டறிய வேண்டும்இதுகுறித்து நடிகையின் தம்பி தீபக் கூறும்போது, ‘கிருத்திகாவிற்கு ரூ.6 ஆயிரம் பெரிய விஷயமே அல்ல. அவர் கொலை செய்யப்பட்ட அன்று கூட அவரது பணப்பையில் ரூ.22 ஆயிரம் இருந்துள்ளது. அவரின் உயிருக்கே ஆபத்து வரும் போது எப்படி அவர் ரூ.6 ஆயிரத்தை கொடுக்காமல் இருந்து இருப்பார். அவர் தனக்கு தெரிந்த ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் அதை திருப்பி கூட கேட்கவில்லை.
ரூ.6 ஆயிரத்திற்கு இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே இந்த கொலைக்கான உண்மையான காரணத்தை போலீஸ் கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.