நோட்டீஸ் பலகை கண்ணாடியில் கையை குத்தி காயப்படுத்திய கைதி ஜாமீன் கிடைக்காததால் ஆத்திரம்


நோட்டீஸ் பலகை கண்ணாடியில் கையை குத்தி காயப்படுத்திய கைதி ஜாமீன் கிடைக்காததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 12 July 2017 3:20 AM IST (Updated: 12 July 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

ஜாமீன் கிடைக்காத ஆத்திரத்தில் தின்தோஷி கோர்ட்டு வளாகத்தில் இருந்த நோட்டீஸ் பலகை கண்ணாடியில் கையை குத்தி காயப்படுத்திய கைதியால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

இம்ரான் பதான் என்பவர் மானபங்கம், பணம் பறிப்பு, கொள்ளை போன்ற வழக்குகளின் கீழ் கடந்த ஆண்டு தின்தோஷி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கின் விசாரணை தின்தோஷி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட நாள் முதல் இம்ரான் பதானுக்கு கோர்ட்டு ஜாமீன் கொடுக்கவில்லை. மேலும் வழக்கின் விசாரணையும் முடியவில்லை. இதனால் அவர் கடும் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் இம்ரான் பதான் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக தின்தோஷி செசன்ஸ் கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டார். இதில், நீதிபதிகள் வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் அவருக்கு ஜாமீனும் கொடுக்கவில்லை.

கையை காயப்படுத்தினார்

இதனால் ஆத்திரமடைந்த அவர் கோர்ட்டு வளாகத்தில் இருந்த நோட்டீஸ் பலகை கண்ணாடியில் கையை ஓங்கி குத்தினார். இதில் கண்ணாடி உடைந்து அவரது கையை கிழித்தது. இதனால் அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது. சிதறிய கண்ணாடி துண்டுகள் பட்டதில் அவரது தலையிலும் காயம் ஏற்பட்டது. இந்தநிலையில் அங்கு நின்ற போலீஸ்காரர் ஒருவர் அவரை பிடிக்க முயன்றார். அப்போது அவர் போலீஸ்காரரிடமும் கை கலப்பில் ஈடுபட்டார்.

இதையடுத்து அங்கு இருந்த மற்ற போலீசார் ஓடிவந்தனர். அவர்கள் கைதியை பிடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவத்தால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து குரார் போலீசார் இம்ரான் பதான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story