பூட்டு போடும் போராட்டத்தை தடுத்ததால் மதுக்கடைக்கு எதிரே அமர்ந்து போராட்டம்


பூட்டு போடும் போராட்டத்தை தடுத்ததால் மதுக்கடைக்கு எதிரே அமர்ந்து போராட்டம்
x
தினத்தந்தி 12 July 2017 4:34 AM IST (Updated: 12 July 2017 4:34 AM IST)
t-max-icont-min-icon

பூட்டு போடும் போராட்டத்தை தடுத்து நிறுத்தியதால் மதுக்கடைக்கு எதிரே அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேர் பஜார் தெருவில் இருந்த மதுக்கடை கோர்ட்டு உத்தரவின் பேரில் அங்கிருந்து அகற்றப்பட்டது. இந்த கடையை டாஸ்மாக் அதிகாரிகள் கிளாம்பாக்கம் ஊராட்சியில் கன்னிகைபேர்–வெங்கல் நெடுஞ்சாலையில் கடந்த மாதம் திறந்தனர். இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு ஆளானார்கள். இந்த நிலையில் அங்குள்ள மதுக்கடையை மூடக்கோரி பூட்டு போடும் போராட்டம் நேற்று மாலை ஊத்துக்கோட்டை வட்டகுழு அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் சார்பில் நடைபெற்றது.

வட்டக்குழு செயலாளர் ரமாகண்ணன் தலைமையில் கிளாம்பாக்கம், அத்திவாக்கம், பூரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடையை நோக்கி கோ‌ஷம் எழுப்பியவாறு மதுக்கடைக்கு பூட்டு போட ஊர்வலமாக வந்தனர். அவர்களை பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் வந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தர்ணா போராட்டம்

இதனால் கன்னிகைபேர்–வெங்கல் நெடுஞ்சாலையில் மதுக்கடைக்கு எதிரே அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாவட்ட டாஸ்மாக் அதிகாரியை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துமாறு கூறினர். போலீசார் அந்த மதுக்கடையை தற்காலிகமாக மூடினர்.

இதையடுத்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். அப்போது அங்கு வந்த மதுபிரியர்கள் மதுக்கடை மூடியதை கண்டித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மதுகடையை திறக்கவேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர்.

இதனால் மீண்டும் பெண்கள் தங்களது போராட்டத்தை தொடங்க வந்தனர். இதையடுத்து மதுபிரியர்களை போலீசார் விரட்டி அடித்தனர். அதன்பின்னர் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story