மாம்பழச்சங்க பண்டிகை: கிறிஸ்தவர்கள், ஏழைகளுக்கு தர்மம் வழங்கினர்
பாளையங்கோட்டையில் மாம்பழச் சங்க பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள், ஏழைகளுக்கு தர்மம் வழங்கினர்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் மாம்பழச் சங்க பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள், ஏழைகளுக்கு தர்மம் வழங்கினர்.
மாம்பழச் சங்க பண்டிகைநெல்லை சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ திருமண்டலம் சார்பில் மாம்பழ சங்கம் மற்றும் ஸ்தோத்திர பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாம்பழச் சங்கம், 237–வது ஸ்தோத்திர பண்டிகை நேற்று முன்தினம் தொடங்கியது.
முதல்நாள் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் கிறிஸ்து ஆலயம், குளோரிந்தாள் ஆலயத்தில் உள்ள கல்லறைகளில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடந்தது. பின்னர் நூற்றாண்டு மண்டபத்தில் கொடியேற்று விழா, ஆயத்த ஆராதனையும், இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
ஏழைகளுக்கு தானம்2–வது நாளான நேற்று காலை மாம்பழச்சங்க பண்டிகை தொடங்கியது. பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு மேற்கு சபை மன்ற தலைவர் சற்குணம் தலைமையில் திருவிருந்து ஆராதனை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு நற்கருணை எடுத்தனர்.
பகல் 12 மணிக்கு பிரதான பண்டிகையான மாம்பழச்சங்க பண்டிகை ஆராதனை நடந்தது. இதில் வடகேரளா திருமண்டல பிஷப் பாஸ்கர் நினான்பென் தேவசெய்தி வழங்கினார்.
தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஏழைகளுக்கு தர்மம் வழங்கினர். நூற்றாண்டு மண்டபம் முன்பு உள்ள நேருஜி கலையரங்கத்தில் உள்ள மைதானத்தின் இருபுறங்களிலும் ஏராளமான ஏழைகள் வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பணம், அரிசி, ரொட்டி, உணவு பொருட்கள், துணிகள் ஆகியவற்றை தானமாக வழங்கினர். மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
திருவிருந்து ஆராதனைஇன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தூய திரித்துவ பேராலயத்தில் 237–வது வருடாந்திர ஸ்தோத்திர பண்டிகை ஆராதனை, திருவிருந்து ஆராதனையும், மதியம் 12 மணிக்கு பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதில் கிறிஸ்தவர்கள் ஒருநாள் வருமானத்தை காணிக்கையாக அளிக்கின்றனர்.
இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) சி.எஸ்.ஐ. நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
விழா ஏற்பாடுகளை உபதலைவர் பில்லி, லே செயலாளர் வேதநாயகம், குருத்துவ செயலாளர் ஸ்டீபன் செல்வின்ராஜ், பொருளாளர் தேவதாஸ் ஞானராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் ஆபிரகாம், டேவிட் அன்பு பிரபாகரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.