டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? கலெக்டர் விளக்கம்


டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? கலெக்டர் விளக்கம்
x
தினத்தந்தி 13 July 2017 3:15 AM IST (Updated: 12 July 2017 10:50 PM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? என்பது குறித்து பொள்ளாச்சியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் ஹரிகரன் விளக்கினார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சுகாதாரத்துறை மட்டுமல்லாது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள், சமூக பாதுகாப்பு துறை, கல்வித்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் அனைத்து துறையினரும் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பருவநிலை மாற்றம் காரணமாக லார்வா கொசுக்கள் மற்றும் நீர் மூலம் உற்பத்தியாகும் பூச்சிகளால் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். வீடுகளில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

குடிநீர் பாத்திரங்களில் கொசுக்கள் புகாமல் இருக்க நன்கு மூடி வைக்க வேண்டும். மாவட்ட முழுவதும் காய்ச்சல் நிலைமை தினமும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வகையான காய்ச்சலுக்கும் தேவையான மாத்திரைகள் போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் இருப்பில் உள்ளன.

மேலும் எந்த பகுதிகளிலும் 3–க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் பரவினால், அந்த காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்து அதை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீட்டின் அருகில் சிமெண்டு தொட்டிகள், தண்ணீர் தொட்டி, ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், டயர்கள் ஆகியவற்றில் நீர்தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தெற்கு ஒன்றியம் சிங்காநல்லூர், ஜமீன் கோட்டாம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகளை கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் ஆய்வு செய்தார். அப்போது பொதுசுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜா, சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், சுகாதார பணிகள் கூடுதல் இயக்குனர் வடிவேலன், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கணேஷ்ராம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பத்மாவதி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கண்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் சியாமளா, பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் நகராட்சி, ஒன்றிய, பேரூராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story