ஓ.பன்னீர்செல்வத்தின் கிணற்றை ஊராட்சிக்கு வழங்கக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்


ஓ.பன்னீர்செல்வத்தின் கிணற்றை ஊராட்சிக்கு வழங்கக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 13 July 2017 4:00 AM IST (Updated: 13 July 2017 3:39 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே, ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான கிணற்றை ஊராட்சி நிர்வாகத்துக்கு தானமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியகுளம்,

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சி பகுதியில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான தோட்டத்தில் புதிதாக கிணறு வெட்டப்பட்டது. இதனால் ஊராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக வெட்டப்பட்ட கிணற்றில் தண்ணீர் குறைந்து போனது என கூறியும், ஓ.பன்னீர்செல்வத்தின் கிணற்றில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வீடுகளில் கருப்பு கொடி கட்டி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்றைய தினம் மாலையில் இந்த பிரச்சினை குறித்து ஆர்.டி.ஓ. தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் நேற்று அடுத்த கட்ட போராட்டமாக அப்பகுதி மக்கள், மாணவ–மாணவிகள் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் கிணற்றை ஊராட்சி நிர்வாகத்துக்கு தானமாக வழங்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக லட்சுமிபுரத்தில் கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன.

இதற்கிடையே ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயபால் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் கலெக்டர் வெங்கடாசலத்தை நேரில் சந்தித்து கிணற்று பிரச்சினை தொடர்பாக பேசினர். அப்போது பேசிய கலெக்டர், லட்சுமிபுரம் ஊராட்சிக்கு வைகை அணையில் இருந்து ரூ.65 லட்சம் செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் லட்சுமிபுரத்தில் உள்ள 5 ஆழ்துளை கிணறுகளில் மின்மோட்டார் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது பேசிய ஊராட்சி முன்னாள் தலைவர், குடிநீர் பிரச்சினைக்கு கலெக்டரின் நடவடிக்கை தீர்வு அளிக்கும். ஆனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காது. எனவே நாங்கள் முன்னாள் முதல்–அமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்து பேச வேண்டும் என்றனர். தொடர்ந்து வருகிற 16–ந்தேதி அவரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கலெக்டர் தெரிவித்தார்.


Next Story