திருப்பூர் மாநகரில் 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


திருப்பூர் மாநகரில் 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 July 2017 3:45 AM IST (Updated: 13 July 2017 5:01 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் 10 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 50 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி ஆணையாளர் அசோகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநகர் நல அதிகாரி பூபதி தலைமையில் சுகாதார அலுவலர் ராஜேந்திரன் மற்றும் சுகாதார பணியாளர்கள் நேற்று திருப்பூர் கே.எஸ்.சி. பள்ளி வீதி, அரிசிக்கடை வீதி, பெருமாள் கோவில் வீதி, பழைய பஸ் நிலையம், தாராபுரம் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் மொத்த விற்பனை கடைகளில் இந்த சோதனை நடந்தது. 22 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. 50 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்தும் குவளைகள் என 10 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள விவரத்தை மொத்த விற்பனையாளர்கள், ஓட்டல்கள், பேக்கரி உரிமையாளர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் தடையை மீறி விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சோதனை தொடரும் என்றனர்.


Next Story