நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி ஆர்ப்பாட்டம்
நீட்தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ராமநாதபுரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்,
நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார். இதன்படி ராமநாதபுரத்தில் அரண்மனை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி முருகேசன் தலைமை தாங்கினார்.
இதில், தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் திவாகரன், முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சம்பத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், நகர் செயலாளர் கார்மேகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, ஒன்றிய செயலாளர்கள் சங்குமுத்துராமலிங்கம், கனகு, கதிரவன், தலைமை கழக பேச்சாளர் அகமதுதம்பி, வழுதூர் ராஜா உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினரும், இந்திய யூனியன் முஸ்லிம்லீக், த.மு.மு.க, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் பேசியதாவது:– தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பையும் மீறி இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்றுள்ளது. பல்வேறு குளறுபடிகளுக்கும், சர்ச்சைகளுக்கும் இடையில் இந்த தேர்வினை நடத்தி முடித்துள்ளனர். இந்த நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது. இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஒப்புதல் இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், ஜனாதிபதி இதற்கான மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதற்காக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்து மாணவர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.