வேதாளை கடற்கரையில் காரில் கஞ்சா, கடல் அட்டை கடத்திய 2 பேர் தப்பி ஓட்டம்
வேதாளை கடற்கரையில் காரில் கஞ்சா, கடல் அட்டை கடத்தி வந்து தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
பனைக்குளம்
மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின் பேரில் மண்டபம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் நவநீதன், தனிப்பரிவு காவலர் சுரேஷ்பாலாஜி உள்ளிட்ட போலீசார் மரைக்காயர்பட்டினம், வேதாளைக்கு இடைப்பட்ட கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேதாளை கடற்கரையில் வந்த காரை போலீசார் நிறுத்தி உள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வெகு தூரம் சென்று நின்றது. பின்னர் அதில் இருந்து 2 பேர் இறங்கி தப்பி ஓடி விட்டனர். அதை தொடர்ந்து காரை போலீசார் சோதனை செய்த போது அந்த காரில் 3 பெரிய பேக்குகளில் 32 பார்சல்களில் 70 கிலோ கஞ்சாவும், ஒரு பெரிய பார்சலில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் 10 கிலோ இருப்பதும் தெரிய வந்தது.
அதன் பின்னர் அந்த காரையும், கஞ்சா, கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் மண்டபம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் காரின் உள்ளே இருந்த டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்து விசாரித்தபோது காரில் வந்தது மதுரை கூடல்நகரை சேர்ந்த சுதாகர் (வயது 37) என்பதும் மற்றொருவர் வேத கிரிதர கணேசன் என்பதும் தெரியவந்தது.
அவர்கள் 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கடல் அடடைகள் வேதாளை கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டது என்பதும், இதன் சர்வதேச மதிப்பு ரூ. 75 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.