குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு வைகோ ஆதரவு


குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு வைகோ ஆதரவு
x
தினத்தந்தி 13 July 2017 4:30 AM IST (Updated: 13 July 2017 12:12 AM IST)
t-max-icont-min-icon

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு வைகோ ஆதரவு போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டுகோள்

விருதுநகர்

அப்துல்கலாம் குடியரசு தலைவராக தேர்வு செய்யபோது அவரை ஆதரிக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் வலியுறுத்தினேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். தற்போது குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக உள்ளார். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மீராகுமார் போட்டியிடுகிறார். குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர்.

குடியரசு துணைத்தலைவராக சங்கர் தயாள்சர்மா பணியாற்றியபோது அவரது தனி செயலராக இருந்து அவருக்கு பக்கபலமாக இருந்தவர் கோபாலகிருஷ்ணகாந்தி. குடியரசு தலைவராக சங்கர் தயாள்சர்மா பதவி ஏற்றபோது இவரை தன்னுடன் அழைத்து சென்றார். மேற்குவங்க ஆளுநராக இருந்தவர். குடியரசு துணைத்தலைவருக்கு பொருத்தமானவர். முன்னாள் இந்திய தலைமைநீதிபதி இதயதுல்லா குடியரசு துணைத்தலைவராக இருந்த போது மேல்சபையை சிறப்பாக நடத்தியதை போன்று கோபாலகிருஷ்ண காந்தியும் நடத்தக்கூடியவர்.

எனவே ஜனநாயகத்தையும், மதசார்பின்மையையும் காப்பாற்றும் வகையில் பிரதமர் மோடி பாரதீய ஜனதா தலைவர்களுடன் பேசி கோபால கிருஷ்ணகாந்தியை இந்திய குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்ய முன்வர வேண்டும்.

தற்போது ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்துள்ளது. அனைத்து மாநில முதல்–அமைச்சர்களும் தங்கள் கருத்தை வலியுறுத்தி கூறினால்தான் ஜி.எஸ்.டி. கவுன்சில் அவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளும். பாரதீய ஜனதா முதல்வர்களும் இதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு அனைத்து முதல்வர்களும் வலியுறுத்தி கூறினாலும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால் தான் ஜி.எஸ்.டி. கவுன்சில் அதை ஏற்றுக்கொள்ளும்.

பட்டாசு தொழில், ஓரளவு எந்திரமயமாக்கப்பட்ட தீப்பெட்டி தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து வீதிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து ஆகும்.

டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சியாக அங்கே எண்ணெய் கிணறுகள் தோண்டப்படுகிறது. இந்தநிலையில் மேததாதூவில் அணைக்கட்ட திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திட்டப்பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். நெடுவாசலில் போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கும் போதே மத்திய பெட்ரோலியத்துறை ஒரு தனியார் நிறுவனத்தோடு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஒப்பந்தம் போடுகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என பெட்ரோலியத்துறை மந்திரி அறிவிக்கிறார். டெல்டா மாவட்டங்களில் மக்களை பாதிக்ககூடிய எந்த திட்டத்திற்கும் அனுமதி அளிக்ககூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story