ஆலாந்துறையில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட இலங்கை அகதிகள்


ஆலாந்துறையில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட இலங்கை அகதிகள்
x
தினத்தந்தி 13 July 2017 3:45 AM IST (Updated: 13 July 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

கோவை ஆலாந்துறை போலீஸ் நிலையத்தை இலங்கை அகதிகள் முற்றுகையிட்டனர்.

பேரூர்,

கோவையை அடுத்த பூலுவபட்டி இலங்கை அகதிகள் முகாம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு கைப்பந்து போட்டி நடந்தது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை அகதிகள் முகாம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக அகதிகள் முகாமை சேர்ந்த நிரோஷ்குமார் என்பவரை விசாரணைக்காக நேற்று காலை ஆலாந்துறை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பெண்கள் உள்பட 25–க்கும் மேற்பட்டோர் ஆலாந்துறை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள், விசாரணைக்கு அழைத்து சென்றவரை போலீசார் அடித்து துன்புறுத்துவதாகவும், அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் கோ‌ஷமிட்டனர்.

மேலும் அவரை உடனே விடுவிக்காவிட்டால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஆலாந்துறை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுகன்யா தலைமையிலான மகளிர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாத்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து விசாரணைக்காக பிடித்து வந்த நிரோஷ்குமாரை போலீசார் விடுவித்தனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

1 More update

Next Story