எம்.ஜி.ஆர். பங்களாவில் மரத்தை வெட்டி கடத்த முயற்சி போலீசார், வனத்துறையினர் விசாரணை


எம்.ஜி.ஆர். பங்களாவில் மரத்தை வெட்டி கடத்த முயற்சி போலீசார், வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 13 July 2017 4:45 AM IST (Updated: 13 July 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆர். பங்களாவில் மரத்தை வெட்டி கடத்த முயற்சி நடந்தது. இதுகுறித்து போலீசார், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி உறையூர் பகுதியில் கோணக்கரை வழியாக குடமுருட்டி செல்லும் சாலையில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின். பங்களா உள்ளது. அவரது மறைவுக்கு பிறகு, அந்த பங்களா மற்றும் அதனை சுற்றியுள்ள 2½ ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஆறுமுகம்(வயது 65) தனது குடும்பத்துடன் அங்கேயே தங்கி இருந்து காவல் காத்து வருகிறார். அந்த நிலத்தில் தென்னை, வேம்பு, தேக்கு உள்பட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. கடந்த வாரம் அங்குள்ள ஒரு மரத்தை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கடத்த முயன்றுள்ளனர்.

இதனை கண்ட ஆறுமுகம் கூச்சலிட்டார். உடனே அவர்கள் வெட்டிய மரத்தின் கிளைகளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்தநிலையில் எம்.ஜி.ஆர். வீட்டில் வெட்டப்பட்டது சந்தன மரம் என்ற தகவல் பரவியது. இதுகுறித்து அறிந்த உறையூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது வெட்டப்பட்ட மரத்தின் கிளைகள் அங்கேயே கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் இரவு வனத்துறை அதிகாரிகள் எம்.ஜி.ஆர். பங்களாவுக்கு சென்று அங்கு வெட்டப்பட்டு கிடந்த மரக்கிளைகளை பார்வையிட்டனர். பின்னர் அது, சந்தன மரமா? என ஆய்வுக்காக எடுத்து சென்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “எம்.ஜி.ஆர். பங்களாவில் இருந்து கைப்பற்றப்பட்ட மரக்கிளைகள் சந்தன மரம் கிடையாது. அவை செம்புலிச்சான் என்ற மரத்தின வகையாகும். ஆனால் பார்ப்பதற்கு சந்தனமரத்தை போலவே இருக்கும். வனப்பகுதியில் இதுபோல் நிறைய மரங்கள் இருக்கும்.“ என்று கூறினர். இது குறித்து முறைப்படி புகார் வராததால் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 

Next Story