நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டம்


நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2017 4:15 AM IST (Updated: 13 July 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

7-வது ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட திட்டமிட்டுள்ளனர்.

காரைக்கால்,

நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் களுக்கு 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தாமல் தாமதப்படுத்தும் புதுச்சேரி அரசையும், உள்ளாட்சித்துறையையும் கண்டித்து கடந்த 10-ந்தேதி முதல் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அப்போது காரைக்கால் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கண்களில் கருப்புதுணியை கட்டிக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு காரைப்பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளனத் தலைவர் அய்யப்பன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். காரைப்பிரதேச அரசு ஊழியர்கள் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், தலைவர் ஜெய்சிங், பொதுச்செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.ஏ.யு.அசனா, முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச். நாஜிம் ஆகியோர் ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். புதுச்சேரி மாநில அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன், துணை பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் ஆனந்தராஜ், புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்க காரைக்கால் கிளை பொறுப்பாளர் சுப்புராஜ், அங்கன்வாரி ஊழியர் சங்கத்தலைவி உஷா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

காரைப்பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக்அலாவுதீன் நிருபர்களிடம் கூறுகையில், ‘உள்ளாட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் புதுச்சேரி அரசு தொடர்ந்து மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகிறது. எங்களது போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் இன்று (வியாழக்கிழமை) உள்ளாட்சித்துறை ஊழியர்கள் அனைவரும் காரைக்கால் கடற்கரை சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம்’ என்று தெரிவித்தார்.

1 More update

Next Story