மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 2 வாலிபர்கள் கைது
இளம்பெண்களை கவருவதற்காக மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை மெரின்டிரைவ் கடற்கரை பகுதி சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு கடலின் அழகை ரசிப்பதற்காக தினசரி ஏராளமானோர் வருகிறார்கள். இந்தநிலையில் கடற்கரைக்கு வரும் இளம்பெண்களை கவருவதற்காக வாலிபர்கள் சிலர் அங்குள்ள சாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து வந்தனர்.
இதுபற்றி மெரின்டிரைவ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவத்தன்று கடற்கரை அருகில் உள்ள இஸ்லாம் ஜிம்கானா பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது 4 வாலிபர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளின் முன்சக்கரத்தை தூக்கியபடி இரைச்சலை எழுப்பிக் கொண்டு சாகசம் செய்தபடி வந்தனர். உடனே போலீசார் அவர்களில் இரண்டு பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மற்ற இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர்.கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நாக்பாடாவை சேர்ந்த முகமது முஸ்தபா நியாஸ்கான்(வயது18), மஜ்காவை சேர்ந்த சானாவாஸ் கான்(18) என்பது தெரியவந்தது.
இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story