பெட்ரோல் திருடிய வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி சிக்கினார்

‘மைக்ரோசிப்’ மூலம் பெட்ரோல் திருடிய வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி சிக்கினார்.
தானே
‘மைக்ரோசிப்’ மூலம் பெட்ரோல் திருடிய வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி சிக்கினார். தானே குற்றப்பிரிவு போலீசார் அவரை கர்நாடகத்தில் வைத்து கைது செய்தனர்.
தானேயில் செயல்படும் பெட்ரோல் ‘பங்க்’குகளில் ‘மைக்ரோசிப்’ பொருத்தி வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யப்படும் பெட்ரோலை திருடுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அதிரடியாக நகரில் உள்ள பெட்ரோல் ‘பங்க்’குகளில் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.இந்த சோதனையின் போது தானே வாக்ளே எஸ்டேட்டில், டோம்பிவிலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பெட்ரோல் ‘பங்க்’குகளில் ‘மைக்ரோசிப்’ பொருத்தி முறைகேடு நடப்பது தெரியவந்தது.
5 லிட்டர் பெட்ரோலில் 200 மில்லி வரை குறைவாக வாகனங்களுக்கு போட்டு வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
முறைகேட்டில் ஈடுபட்டதாக 98 பெட்ரோல் ’பங்க்’குகளை போலீசார் ‘சீல்’ வைத்து மூடினர். மேலும் இந்த மோசடி தொடர்பாக பெட்ரோல் ‘பங்க்’ உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.போலீசார் நடத்திய விசாரணையில், டோம்பிவிலியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் விவேக் சேத்தே (வயது47) என்பவர் இந்த ‘மைக்ரோசிப்’களை பெட்ரோல் ‘பங்க்’ உரிமையாளர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், பெட்ரோல் ‘பங்க்’ மோசடிக்கு மூளையாக செயல்பட்டது மும்பை கலினாவில் உள்ள எரிபொருள் நிரப்பும் கருவி தயார் செய்யும் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்த பிரசாந்த் நுல்கர்(56) என்பது தெரியவந்தது.
இதில், அவர் தான் மோசடிக்கு பயன்படுத்தும் ‘மைக்ரோசிப்’களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில், பிரசாந்த் நுல்கர் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் தலைமறைவாக இருப்பதாக தானே குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் ஹூப்ளி சென்று அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் விசாரணைக்காக நேற்று தானே அழைத்து வரப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






