புதியம்புத்தூரில் பால் வேன் மோதி தொழில் அதிபர் சாவு; மற்றொருவர் படுகாயம் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சோக சம்பவம்


புதியம்புத்தூரில் பால் வேன் மோதி தொழில் அதிபர் சாவு; மற்றொருவர் படுகாயம் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சோக சம்பவம்
x
தினத்தந்தி 14 July 2017 2:00 AM IST (Updated: 13 July 2017 9:12 PM IST)
t-max-icont-min-icon

புதியம்புத்தூரில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த தொழில் அதிபர் பால் வேன் மோதி பலியானார்.

ஓட்டப்பிடாரம்,

புதியம்புத்தூரில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த தொழில் அதிபர் பால் வேன் மோதி பலியானார். மற்றொரு தொழில் அதிபர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொழிலதிபர்கள்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர் திருவாண்டி (52). நண்பர்களான இவர்கள் புதியம்புத்தூரில் ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி செய்து, அவைகளை வெளியூர்களுக்கு விற்பனை செய்து வந்தனர். இவர்கள் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

தொழில் அதிபர் சாவு

நேற்று காலை 5 மணிக்கு நடைபயிற்சிக்காக ஆறுமுகசாமி, திருவாண்டி ஆகியோர் புதியம்புத்தூரில் இருந்து தட்டப்பாறைக்கு சென்று விட்டு, மீண்டும் புதியம்புத்தூரை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பின்னால் வந்த பால் வேன், எதிர்பாராத விதமாக 2 பேர் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகசாமி பலியானார். படுகாயம் அடைந்த திருவாண்டியை அந்த பகுதி மக்கள் மீட்டு, தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிரைவர் தப்பி ஓட்டம்

இந்த விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் புதியம்புத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆறுமுகசாமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புதியம்புத்தூர் போலீசார், வேன் டிரைவரான தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ராக்கு முத்து என்பவரை தேடி வருகின்றனர்.

Next Story