குடிபோதையில் கணவர் தகராறு மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை


குடிபோதையில் கணவர் தகராறு மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 14 July 2017 4:15 AM IST (Updated: 14 July 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு செலவுக்கு கூட பணம் தராமல் கணவர் குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால் மனம் உடைந்த இளம்பெண், வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் ஏகவள்ளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வரதராஜ். இரும்பு பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி காமாட்சி(வயது 28). இவர்களுக்கு மோகன சுந்தரம்(10), சஞ்சய்(8) என 2 மகன்கள் உள்ளனர்.

வரதராஜுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். வீட்டு செலவுக்கும் பணம் கொடுப்பது இல்லை என்று தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல் குடித்து வந்து மனைவியுடன் வரதராஜ் தகராறில் ஈடுபட்டார். தினமும் இதேபோல் தனது கணவர், வீட்டு செலவுக்கு கூட பணம் தராமல் குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்ததால் காமாட்சி மனம் உடைந்தார்.

இதனால் விரக்தி அடைந்த அவர், வீட்டின் முதல் மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி காமாட்சி பரிதாபமாக இறந்தார்.

காமாட்சியின் தற்கொலை தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story