ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு மீதான உத்தரவு 19–ந் தேதிக்கு தள்ளிவைப்பு
சென்னை பெருநகர சைதாப்பேட்டை 18–வது கோர்ட்டில் அ.தி.மு.க. தொண்டர் அணி சார்பில் செல்வ விநாயகம் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார்.
ஆலந்தூர்,
அந்த மனுவில், ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என 186 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்து இருந்தோம். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இந்த வழக்கை தேனாம்பேட்டை போலீசார் ஏன் விசாரிக்க வேண்டும்? என்பது உள்பட சில விளக்கங்கள் கேட்டு அதற்கு பதில் அளிக்குமாறு மனுதாரருக்கு நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து மாஜிஸ்திரேட்டு கேட்ட விளக்கங்களுக்கு மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் மீதான விசாரணை நேற்று சைதாப்பேட்டை 18–வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு முன் வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் புகழேந்தி ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு மீதான உத்தரவை வருகிற 19–ந் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.