107 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்


107 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்
x
தினத்தந்தி 14 July 2017 4:30 AM IST (Updated: 14 July 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

முகையூரில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 107 பேருக்கு ரூ.10¼ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் தாலுகாவுக்குட்பட்ட முகையூர் கிராமத்தில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தாமரை, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ரஞ்சனி, கண்டாச்சிபுரம் தாசில்தார் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார் வரவேற்றார். முகாமில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

அதைத் தொடர்ந்து கலெக்டர் சுப்பிரமணியன் 107 பேருக்கு ரூ.10 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- அரசு சார்பில் நடத்தப்படும் மனுநீதிநாள் முகாம், அம்மா திட்ட முகாம், மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கையாக தந்து அரசின் சலுகைகள், நலத்திட்டங்களை பெற்றுக் கொள்ளவேண்டும். நீங்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் குறித்து தன்னிடம் தெரிவியுங்கள். நான் அதனை தீர்த்து வைக்கிறேன். மாவட்டத்தில் கடந்த ஆண்டு 45 சதவீத மழை மட்டுமே பெய்தது. இதனால் ஏற்பட்ட குடிநீர் பிரச்சினையை போக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.35 கோடி குடிநீர் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. பிரச்சினை தீராத கிராமங்கள் குறித்து தகவல் வந்தால் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஒவ்வொருவரும் செயல்படுத்திடவேண்டும். அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் தனிநபர் கழிப்பறை கட்டாயம் அமைக்கவேண்டும். இதற்காக ரூ.12 ஆயிரம் அரசு மானியம் வழங்குகின்றது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தாமோதரன், வட்ட வழங்கல் அலுவலர் பாலு, தலைமையிடத்து துணை தாசில்தார் கண்ணன், நிலஅளவைத்துறை அதிகாரி சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி தலைவர் மஞ்சுளா துரை, நடராஜன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் ராணுவ வீரர்கள், கலெக்டரிடம் வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story