தறிகெட்டு ஓடிய பள்ளிக்கூட பஸ் 2 ஆட்டோ, கார் மீது மோதியது
சாந்தாகுருசில் தறிகெட்டு ஓடிய பள்ளிக்கூட பஸ் 2 ஆட்டோ மற்றும் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மும்பை,
சாந்தாகுருசில் தறிகெட்டு ஓடிய பள்ளிக்கூட பஸ் 2 ஆட்டோ மற்றும் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்.
மும்பை சாந்தாகுருசில் செயல்பட்டு வரும் தனியார் சர்வதேச பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை பள்ளிக்கூட பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 20 மாணவ, மாணவியர் இருந்தனர்.பஸ் சாந்தாகுருஸ் மேற்கில் உள்ள மிலன் வணிக வளாக பகுதியில் காலை 6.50 மணியளவில் வந்து கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதனால் மாணவர்கள் பயத்தில் அலறினார்கள்.
இந்தநிலையில், தாறுமாறாக ஓடிய அந்த பஸ் எதிரே வந்த இரண்டு ஆட்டோக்கள் மீது அடுத்தடுத்து மோதியது. மேலும் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீதும் மோதி நின்றது.இந்த விபத்தில் இரண்டு ஆட்டோக்கள், கார் சேதம் அடைந்தன. பள்ளிக்கூட பஸ்சின் முன் பகுதியும் உடைந்தது. இருப்பினும் இந்த விபத்தில் பள்ளிக்கூட பஸ்சில் இருந்த மாணவ, மாணவியர், ஆட்டோ மற்றும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த விபத்தின் காரணமாக மாணவர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர்.
பள்ளிக்கூட பஸ் ஏற்படுத்திய இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது. தகவல் அறிந்து சாந்தாகுருஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள்.மேலும் விபத்தை ஏற்படுத்திய பள்ளிக்கூட பஸ் டிரைவர் ராஜீவ் விஸ்வகர்மாவை விசாரணைக்காக பிடித்து சென்றனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.