வாலிபரிடம் இருந்து 50 ஜியோ ‘சிம் கார்டு’கள் பறிமுதல்
ஜியோ வாடிக்கையாளர் விவரங்களை வெளியிட்ட வாலிபரிடம் இருந்து போலீசார் 50 ‘சிம் கார்டு’களை பறிமுதல் செய்து உள்ளனர்.
மும்பை,
ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் விவரங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இது குறித்து ஜியோ நிறுவனம் சார்பில் நவிமும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நவிமும்பை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு மும்பை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் சுஜன்கார்க் பகுதியை சேர்ந்த இம்ரான் சிம்பா(வயது35) என்பவர் வாடிக்கையாளர் தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டது தெரியவந்தது.
இதையடுத்து மராட்டிய மாநில போலீசார் கொடுத்த தகவலின்பேரில் ராஜஸ்தான் போலீசார் இம்ரான் சிம்பாவை அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில், அவர் கணினி அறிவியல் பட்டப்படிப்பை பாதியில் கைவிட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரது வீட்டில் இருந்து கணினி, செல்போன் மற்றும் 50 ஜியோ ‘சிம் கார்டு’களை பறிமுதல் செய்துள்ளனர். இம்ரான் சிம்பா விசாரணைக்காக மும்பை அழைத்து வரப்பட்டார். இந்த வழக்கு குறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–கைது செய்யப்பட்டவரின் கணினி ஹார்டு டிஸ்க், செல்போன் போன்றவற்றை தடயவியல் ஆய்விற்காக அனுப்பி உள்ளோம். ஆய்வு விவரம் கிடைத்த பிறகே அவருக்கு எப்படி வாடிக்கையாளர் விவரங்கள் கிடைத்தது, எப்படி அதை இணையதளத்தில் வெளியிட்டார், இதில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது போன்ற தகவல்கள் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.