கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை முயற்சி: தலைமை ஆசிரியை உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு


கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை முயற்சி: தலைமை ஆசிரியை உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 14 July 2017 3:58 AM IST (Updated: 14 July 2017 3:58 AM IST)
t-max-icont-min-icon

செம்பட்டி அருகே கிணற்றில் குதித்து மாணவி தற்கொலைக்கு முயற்சித்தது தொடர்பாக தலைமை ஆசிரியை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள ஆத்துபட்டியை சேர்ந்தவர் மூவேந்திரன். அவருடைய மகள் சுகன்யா (வயது 14). இவர், சின்னாளபட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11-ந் தேதி இவர், தனது வீட்டருகே உள்ள பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதில் படுகாயம் அடைந்த சுகன்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாணவிக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. முதுகு தண்டுவடம் மற்றும் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது சுகன்யா வாலிபால் விளையாட்டு வீராங்கனை ஆவார். கடந்த 2 மாதமாக இவர், சரிவர பயிற்சிக்கு செல்லாமல் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் அவரை மீண்டும் விளையாட்டில் பங்கேற்குமாறு ஆசிரியர்கள் வற்புறுத்தினர்.

இதற்கு மறுத்த சுகன்யாவை உடற்கல்வி ஆசிரியைகள் மற்றும் ஆசிரியை திட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது பெற்றோரிடம் சுகன்யா தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவருடைய பெற்றோர், பள்ளிக்கு நேரடியாக சென்று விளையாட்டில் ஆர்வம் இல்லாத தனது மகளை வற்புறுத்தக் கூடாது என்று ஆசிரியைகளிடம் கூறினர்.

ஆனால் அதன்பிறகும் சுகன்யாவுக்கு உடற்கல்வி ஆசிரியைகள் மற்றும் வகுப்பு ஆசிரியை தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சுகன்யாவை பிரம்பால் அடித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுகன்யா கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் பள்ளி தலைமை ஆசிரியை வினாயகஜெயந்தி, வகுப்பு ஆசிரியை பிரேமலதா, உடற்கல்வி ஆசிரியைகள் சசிகோகிலா, ரம்யா ஆகிய 4 பேர் மீது செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளையாட்டில் பங்கேற்க சொல்லி வற்புறுத்தியதால் தற்கொலை முயற்சியில் மாணவி ஈடுபட்ட சம்பவம் செம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story