இரோம் சர்மிளா திருமணத்துக்கு எதிர்ப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் தே.மு.தி.க. நிர்வாகி புகார்


இரோம் சர்மிளா திருமணத்துக்கு எதிர்ப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் தே.மு.தி.க. நிர்வாகி புகார்
x
தினத்தந்தி 14 July 2017 4:03 AM IST (Updated: 14 July 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

இரோம் சர்மிளா திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் தே.மு.தி.க. நிர்வாகி புகார் அளித்தார்.

கொடைக்கானல்,

மணிப்பூரை சேர்ந்தவர் இரோம் சர்மிளா (வயது 46). சமூக போராளியான இவர், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டெஸ்மான்ட் அந்தோணி பெலார்மைன் (55) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் கொடைக்கானல் நகரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்தனர்.

இந்தநிலையில் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கொடைக்கானல் தாலுகா பேத்துப்பாறை கிராமத்தை சேர்ந்த தே.மு.தி.க. நிர்வாகி மகேந்திரன் என்பவர் சார்பதிவாளர் ராஜேசிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், இரோம் சர்மிளா மற்றும் அவருடைய காதலர் டெஸ்மான்ட் அந்தோணி பெலார்மைன் மன அமைதிக்காக பெருமாள் மலைக்கு வந்ததாக கூறினர். 16 வருடம் உண்ணாவிரதம் இருந்த பெண்மணி என்ற காரணத்தால் அவரை வரவேற்கிறேன்.

கடந்த மாதம் அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நான் என் திருமணம் முடிந்த பிறகு கொடைக்கானல் பகுதியில் வாழும் பழங்குடியினருக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்று சொன்னார். அமைதியான நகரமாக மாற்றத்துடிக்கும் கொடைக்கானல் சமூக சேவகர்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொடைக்கானல் என்பது சர்வதேச சுற்றுலா தலம். இங்கே பல நாட்டவர்கள் வந்து செல்லக் கூடிய சூழல் உள்ளது. மேலும் கொடைக்கானல் மக்கள் சுற்றுலாவை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர். கடந்த காலங்களில் நக்சலைட், ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளிட்டோரின் அச்சுறுத்தல்களே எங்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

இந்தநிலையில் இவர்களால் எந்த நேரத்திலும் கொடைக்கானல் போராட்ட களமாக்கிவிட இயலும். எனவே திருமணத்திற்கு விண்ணப்பித்த மனுவை நிராகரிக்க வேண்டும். அவர்களை திருமணம் நடத்த அனுமதித்தால் அவர்கள் நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட வாய்ப்பு உள்ளது. இதனால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவினை பெற்றுக் கொண்ட சார்பதிவாளர் ராஜேஷ் மனு பரிசீலனை செய்யப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்படும் என கூறினார்.

Next Story