கலெக்டர் அலுவலத்தில் கூடுதல் கட்டிடம் அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி


கலெக்டர் அலுவலத்தில் கூடுதல் கட்டிடம் அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி
x
தினத்தந்தி 14 July 2017 4:30 AM IST (Updated: 14 July 2017 4:30 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ரூ.26 கோடியே 62 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் பற்றி அறிவித்த தமிழக முதல்–அமைச்சருக்கு நன்றி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மதுரை,

தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:– மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட மாவட்ட மக்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு கொடுத்தோம்.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் பேரவை விதி எண் 110–கீழ் வருவாய் துறை தொடர்பாக முதல்–அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, தணிக்கை துறை, மாவட்ட கருவூலம், ஆதிதிராவிடர் நல அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம் உள்பட அரசுத்துறை அலுவலகங்கள் பல்வேறு இடங்களில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.

இந்த துறைகளின் அலுவலகங்கள் மதுரையில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே செயல்பட வேண்டி ரூ.26 கோடியே 62 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படும் என்றும், அது மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கட்டிடங்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதன்மூலம் அனைத்து தரப்பினரின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்–அமைச்சருக்கு மாவட்ட மக்களின் சார்பிலும், வருவாய் துறை அமைச்சர் என்ற முறையிலும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story