மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்
சேலம் அருகே மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்து நடப்பதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொண்டலாம்பட்டி,
சேலம்–கோவை தேசிய நெடுஞ்சாலையில் வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1,800–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் மாணவ–மாணவிகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கிறார்கள். ஆனாலும் அவ்வப்போது விபத்துக்கள் நடக்கிறது.
இந்தநிலையில், கடந்த 11–ந் தேதி மாணவிகள் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த லாரி, சாலையோரம் நின்றிருந்த 2 கார்கள் மீது மோதியது. அத்துடன் ஒரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்ததால் ஏற்கனவே, 2012–ம் ஆண்டிலேயே வேம்படிதாளம் அரசு பள்ளி முன்பு மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித பணிகளும் தொடங்கப்படாமல் இருப்பதாவும், அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாலும் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் நேற்று முன்தினம் பள்ளி தலைமை ஆசிரியை அமுதா அறையை முற்றுகையிட்டு எங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்கிறோம். எனவே மாற்று சான்றிதழை கொடுங்கள் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனிடையே, வேம்படிதாளம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளை நேற்று அவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை. பாலம் கட்டும் பணி தொடங்கினால் மட்டுமே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து பெற்றோர்கள் 200–க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வந்தனர். பின்னர், அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, சேலம் தெற்கு தாசில்தார் தீபசித்ரா, தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் சிவாஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, தரைவழி சுரங்கபாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதை முறைப்படி கட்டிமுடிக்க 6 மாதகாலம் ஆகலாம் என்றும், எனவே, அதுவரை மாணவர்களின் பெற்றோர்கள் பொறுத்துக்கொண்டு தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாணவ–மாணவிகள் சாலையை கடக்கும்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் உறுதியளித்தனர். இந்த பேச்சுவார்த்தையை ஏற்று அதில் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக ஒப்புக்கொண்டனர். ஆனால் சில பெற்றோர்கள் தரப்பில் பாலம் கட்டும் பணி தொடங்கினால் தான் பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.