சித்தராமையா சென்ற ஹெலிகாப்டர் வழி மாறியதால் பரபரப்பு


சித்தராமையா சென்ற ஹெலிகாப்டர் வழி மாறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 July 2017 5:10 AM IST (Updated: 14 July 2017 5:09 AM IST)
t-max-icont-min-icon

ராய்ச்சூர் அருகே தரை இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல் முதல்–மந்திரி சித்தராமையா சென்ற ஹெலிகாப்டர் வழிமாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூரு,

ராய்ச்சூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை முதல்–மந்திரி சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக அந்த பணிகளை தொடங்கி வைப்பதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் முதல்–மந்திரி சித்தராமையா ராய்ச்சூருக்கு புறப்பட்டு சென்றார். ராய்ச்சூர் மாவட்டம் கொன்டிஹாலாவில் காலை 11 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள இருந்தார்.

இதற்காக கொன்டிஹாலா அருகே அல்காவாடகி பகுதியில் முதல்–மந்திரி சித்தராமையா வந்த ஹெலிகாப்டர் தரை இறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சித்தராமையா வந்த ஹெலிகாப்டர் அல்காவாடகி பகுதியில் தரை இறங்குவதற்கு பதிலாக, அங்கிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லிங்கசுகுரில் இருக்கும் கல்லூரி மைதானத்தில் தரை இறங்கியது.

உடனே முதல்–மந்திரி சித்தராமையாவும் ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்கி விட்டார். அதன்பிறகு தான் ஹெலிகாப்டர் வழிமாறி, வேறு இடத்தில் தரை இறங்கப்பட்டது சித்தராமையாவுக்கும், ஹெலிகாப்டர் பைலட்டுக்கும் தெரியவந்தது. பின்னர் லிங்கசுகுரில் இருந்து மீண்டும் ஹெலிகாப்டர் புறப்பட்டு அல்காவாடகி பகுதிக்கு சென்றது. ஹெலிகாப்டர் வழிமாறி வேறு இடத்தில் தரை இறக்கப்பட்டதால், எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

ஆனால் முதல்–மந்திரி சித்தராமையா சென்ற ஹெலிகாப்டர் சரியான இடத்தில் தரை இறங்காமல், வேறு பகுதியில் தரை இறங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முதல்–மந்திரி சித்தராமையாவின் ஹெலிகாப்டர் வழிமாறி வேறு இடத்தில் இறங்கியது பற்றி வி.வி.நாயக் எம்.பி. உறுதி செய்துள்ளார்.


Next Story