பனித்திட்டு அருகே நடுக்கடலில் என்ஜின் பழுதாகி படகு கவிழ்ந்தது 4 மீனவர்கள் நீந்தி உயிர் தப்பினர்


பனித்திட்டு அருகே நடுக்கடலில் என்ஜின் பழுதாகி படகு கவிழ்ந்தது 4 மீனவர்கள் நீந்தி உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 14 July 2017 5:10 AM IST (Updated: 14 July 2017 5:10 AM IST)
t-max-icont-min-icon

பனித்திட்டு அருகே நடுக்கடலில் மீன் பிடித்தபோது என்ஜின் பழுதாகி படகு கவிழ்ந்தது. இதிலிருந்த 4 மீனவர்கள் கடலில் நீந்தி உயிர் தப்பினர்.

பாகூர்,

புதுவை வீராம்பட்டினம் ஜீவரத்தினம் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 52), மீனவர். இவர் தனது விசைப்படகில், சகோதரர் அய்யனாரப்பன், அதே பகுதியைச் சேர்ந்த அருள், நல்லவாடு கிராமத்தை சேர்ந்த கந்தன் ஆகிய 4 பேருடன் நேற்று முன்தினம் மாலை வீராம்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

நள்ளிரவில் பனித்திட்டு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென படகு என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனால் படகை மேற்கொண்டு இயக்க முடியாமல் 4 பேரும் தவித்தனர். பின்னர் நங்கூரம் போட்டு, என்ஜினில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து அவர்கள் கரைக்கு திரும்ப முடிவு செய்தனர். அதன்படி காற்றின் திசைக்கு ஏற்ப படகை மெதுவாக கரைக்கு கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. இதுபற்றி வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்களுக்கு பாலகிருஷ்ணன் செல்போன் மூலம் பேசி, தங்களை மீட்க வருமாறு கூறினார்.

இதற்கிடையில் கடல் சீற்றத்தால் படகு மெல்ல மெல்ல கவிழத்தொடங்கியது. இதையடுத்து நான்கு பேரும் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில், கடலில் குதித்து நீந்தி கரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே நல்லவாடு மீனவர்கள் படகில் சென்று அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடலில் கவிழ்ந்த படகு அலையின் சீற்றத்தால் நேற்று காலை பனித்திட்டு பகுதியில் கரை ஒதுங்கியது. இதில் படகு மற்றும் மீன்பிடி வலைகள் சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

Next Story