புதுவையில் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம் நடத்திய கும்பல் கைது 4 பேர் கைது; 6 பெண்கள் மீட்பு
புதுவையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தி வந்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பெண்கள் மீட்கப்பட்டனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி உருளையன்பேட்டை மறைமலை அடிகள் சாலையில் ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் உத்தரவின் பேரில் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி தலைமையில் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெங்களூரு, கடலூர் பகுதியை சேர்ந்த 6 பெண்களை போலீசார் மீட்டனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அந்த மசாஜ் சென்டரில் இருந்த 4 பேர் அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் திண்டிவனம் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மகன் கார்த்திக், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகன் சக்திவேல், சாமிபிள்ளைத்தோட்டத்தை சேர்ந்த பாபு என்பவரது மனைவி சரஸ்வதி என்ற சகி, சக்திவேல் என்பவரது மனைவி தமிழ்ச்செல்வி என்ற முத்துலட்சுமி என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.24,680 ரொக்கம் மற்றும் 12 செல்போன்கள், ஆணுறைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது குருசுக்குப்பம் பகுதியை சேர்ந்த ராதிகா என்ற ஆரோக்கியமேரி என்பவர் அந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட பெண்கள் 6 பேரையும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சுற்றுலா பயணிகள் போல் சென்று சிக்க வைத்த போலீசார்
புதுச்சேரி பஸ் நிலையம் எதிரே நடத்தப்பட்டு வரும் மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவர்களை கூண்டோடு பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டனர். இதற்காக போலீசார் 2 பேரை வாடிக்கையாளர்கள் போல் அங்கு அனுப்பி வைத்தனர். டிரவுசர், டி-சர்ட் அணிந்து சுற்றுலா பயணிகள் போல் சென்ற அவர்களிடம் அங்கு இருந்தவர்கள் பெண்களிடம் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்றால் தலா ரூ.3 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டனர். இதற்கு சம்மதித்து அவர்களும் பணத்தை கொடுத்தனர். உடனே மசாஜ் சென்டரில் இருந்த பெண்களை அவர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தினர். அந்த பெண்களில் விரும்பியவர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
மாறுவேடத்தில் இருந்த போலீசாரும் அவர்களில் 2 பேரை தேர்வு செய்து அங்கு இருந்த தனி அறைக்குச் சென்றனர். அப்போது ஏற்கனவே திட்டமிட்டபடி வெளியில் காத்து இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு தங்களது செல்போனில் இருந்து உள்ளே விபசாரம் நடப்பதை உறுதி செய்து குறுஞ்செய்தி அனுப்பினர். இதைத்தொடர்ந்து மறைவான இடத்தில் தயாராக இருந்த போலீசார் அதிரடியாக அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்திய கும்பலை மடக்கிப்பிடித்து 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 6 பெண்களை மீட்டனர். இதன்பின் அவர்கள் அனைவரையும் போலீஸ் வேனை வரவழைத்து அதில் ஏற்றிச் சென்றனர்.