அடையாளம் தெரியாத வாகனம் மோதி தையல்கடைக்காரர் பலி


அடையாளம் தெரியாத வாகனம் மோதி தையல்கடைக்காரர் பலி
x
தினத்தந்தி 14 July 2017 5:39 AM IST (Updated: 14 July 2017 5:39 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே அடையாளம்தெரியாத வாகனம் மோதி தையல்கடைக்காரர் பலியானார்.

குடியாத்தம்,

குடியாத்தம் அருகே அடையாளம்தெரியாத வாகனம் மோதி தையல்கடைக்காரர் பலியானார். போலீஸ் எல்லை பிரச்சினையால் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேஷாக். இவரது மகன் ராஜசேகர் என்கிற பப்லு (வயது 38). இவருக்கு தேவகிருபை என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ராஜசேகர் பள்ளிகொண்டாவில் தையல்கடை நடத்தி வந்தார். நேற்று மதியம் ராஜசேகர் வேலை சம்மந்தமாக மோட்டார் சைக்கிளில் குடியாத்தத்திற்கு வந்துள்ளார். பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் பள்ளிகொண்டா நோக்கி சென்றுள்ளார்.

அப்போது வேப்பூர் கிராமத்தை கடந்து சென்றபோது அவர்மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராஜசேகர் படுகாயம் அடைந்தார். இதைபார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சிற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்குவந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ராஜசேகரை பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த போலீசாருக்கு விபத்து நடைபெற்ற இடம் குடியாத்தம் நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்டதா அல்லது குடியாத்தம் தாலுகா காவல்நிலைய எல்லைக்குட்பட்டதா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. போலீசாரின் எல்லை பிரச்சனை காரணமாக விபத்தில் பலியான ராஜசேகர் உடல் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ரோட்டிலேயே கிடந்தது. இதனால் அங்கு திரண்டிருந்த ராஜசேகரின் உறவினர்கள், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் குடியாத்தம் – வேலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் ராஜசேகரின் உடலை தனியார் ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story