பள்ளிக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்
பனப்பாக்கம் அருகே பாடம் நடத்த ஆசிரியர்கள் வராததால், பள்ளிக்கு பூட்டுப்போட்டு பொதுமக்களும், பெற்றோரும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பனப்பாக்கம்
பனப்பாக்கம் அருகே பாடம் நடத்த ஆசிரியர்கள் வராததால், பள்ளிக்கு பூட்டுப்போட்டு பொதுமக்களும், பெற்றோரும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு:–
பனப்பாக்கத்தை அடுத்த தென்னல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக பூபாலன் என்பவரும், இடைநிலை ஆசிரியராக மோகன் என்பவரும் வேலை பார்த்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் பூபாலன் நெமிலி வட்டார வள மையம் சார்பில், நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான வலுவூட்டும் பயிற்சியில் நேற்று காலை பங்கேற்றுள்ளார்.தினமும் காலை வழக்கம்போல் பள்ளிக்கு வர வேண்டிய இடைநிலை ஆசிரியர் மோகன், நேற்று காலை திடீரெனப் பள்ளிக்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது. நேற்று காலை 9 மணிக்கு வழக்கம்போல், வந்த மாணவ–மாணவிகள், பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் யாரும் வராததால் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
பள்ளியில் பாடம் படிக்க சென்ற மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள் யாரும் வராததால் விளையாடிக் கொண்டிருந்ததை அறிந்த, அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர் பள்ளிக்கு வந்து பார்த்தபோது, அங்குப் பாடம் நடத்த ஆசிரியர்கள் வரவில்லை என்பது தெரிய வந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்களும், பெற்றோரும் பள்ளிக்கு பூட்டுப்போட்டு பூட்டி மாணவ–மாணவிகளுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களும், பெற்றோரும் பள்ளிக்கு பாடம் நடத்த வராத ஆசிரியர்களை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுபற்றி தகவல் அறிந்ததும், நெமிலி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மனோகரன் பள்ளிக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடமும், பெற்றோரிடமும் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள், இந்தப் பள்ளியில் வேலை பார்த்து வரும் இரண்டு ஆசிரியர்களும் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்றும், இருவரையும் வேறு பள்ளிக்கு மாற்றி விட்டு, இந்தப் பள்ளிக்கு புதிய ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மனோகரன் உறுதியளித்ததும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களும், பெற்றோரும் கலைந்து சென்றனர். உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மனோகரன் பள்ளி தலைமை ஆசிரியர் பூபாலனை தொடர்பு கொண்டு உடனே பயிற்சி முகாமில் இருந்து பள்ளிக்கு வருமாறு கூறினார். அதன்பேரில், தலைமை ஆசிரியர் பூபாலன் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவ–மாணவிகளுக்கு பாடம் நடத்தினார்.அதைத்தொடர்ந்து ஆசிரியர் மோகன் பள்ளிக்கு வராததால், அவருக்கு மாற்று ஏற்பாடாக எஸ்.கொளத்தூர் அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ரமேசை ஒருநாள் மட்டும் தென்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாடம் நடத்த வருமாறு கூறினார். அதன்படி ஆசிரியர் ரமேஷ், நேற்று தென்னல் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவ–மாணவிகளுக்கு பாடம் நடத்தினார்.
பாடம் நடத்த ஆசிரியர்கள் யாரும் வராததால் பள்ளிக்கு பூட்டுப்போட்டு பொதுமக்களும், பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.