முறையாக குடிநீர் வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலம் முற்றுகை
முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. சமரசம் செய்து கலைந்து போக செய்தார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ஒன்றியம் செம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எம். தொட்டியாங்குளத்தில் 500–க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என்று புகார் கூறினர். மேலும் இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஒன்று திரண்டு வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதில் கடந்த 3 மாதமாக தொடர்ந்து எங்கள் ஊருக்கு குடிநீர் வருவதில்லை. ஊராட்சி மூலம் போடப்பட்ட அடிகுழாய்கள் அனைத்தும் பயனற்று கிடக்கின்றன. நாங்கள் அனைவரும் குடிநீரை விலைக்கு வாங்கித்தான் குடிக்கிறோம். எங்கள் பகுதியில் உப்பு தண்ணீர் கூட இல்லாதால் நாங்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றோம்.
இது பற்றி பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்கிறோம் என்றனர். தகவலறிந்து வந்த சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலரை பார்வையிட செய்ய அனுப்பி வைத்தார். பின்னர் கிராம பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, இன்னும் ஓரிரு தினங்களில் முறையாக குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும். மேலும் தனது சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் ரூ. 5 லட்சம் செலவில் கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்து தருவதற்கான பணிகள் மேற்க்கொள்ளப்படும் என்றார். அதைத்தொடர்ந்து போராட்டம் நடத்திய பெண்கள் கலைந்து சென்றனர்.