இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க கலெக்டரிடம் மனு


இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 15 July 2017 4:00 AM IST (Updated: 14 July 2017 11:59 PM IST)
t-max-icont-min-icon

எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பகுதியில் இருந்து 2 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்ததாக கைது செய்துள்ளது. கோரவள்ளி சூர்யா என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், அதில் இருந்த தோப்பு வலசையை சேர்ந்த முனீஸ்வரன், நாகராஜ், யோகன், தங்கச்சிமடத்தை சேர்ந்த சதீஷ் ஆகிய 4 பேரையும், பெரியபட்டினத்தை சேர்ந்த சிக்மாஸ் என்பவருடைய விசைப்படகையும், அதில் இருந்த பெரியபட்டினம் மீனவர்கள் சேகு ஜமாலுதீன், நெய்னா முகம்மது ராவுத்தர், தவசி ஆகிய 3 மீனவர்களையும் சிறை வைத்துள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் நிலையை அறிந்த அவர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துஉள்ளனர்.

இந்தநிலையில் இலங்கையில் சிறைவைக்கப்பட்டுஉள்ள பெரியபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சேகுஜமாலுதீன், நெய்னா முகம்மது ராவுத்தர், தவசி ஆகியோரின் குடும்பத்தினர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் முகம்மது ஆசிக், பைரோஸ்கான் ஆகியோருடன் வந்து கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு யாழ்பாணம் சிறையில் வைக்கப்பட்டுள்ள இந்த 3 பேரையும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும்.

அவர்களுடைய படகை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடிக்க சென்றபோது சிறைபிடிக்கப்பட்டு உள்ளதால் நாங்கள் சொல்ல முடியாத அவதிஅடைந்து வருகிறோம். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்காக முதல்–அமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளதால் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் நம்பிக்கை ஏற்படுத்தி உறுதி அளித்தார்.


Next Story