கண்டக்டர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கண்டக்டரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஊட்டி,
ஊட்டி அருகே உள்ள எம்.பாலாடா கே.கே. நகரை சேர்ந்த குமார் என்பவரது மகன் சுரேஷ் (வயது 25). இவர் தனியார் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான போலீஸ் எழுத்து தேர்வில் சுரேஷ் தேர்ச்சி பெற்றிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் எம்.பாலாடா பகுதியில் இருந்து ஊட்டி மெயின் பஜாருக்கு வந்தார். அங்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் சுரேஷ் சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் தான் விஷம் குடித்துள்ளதாகவும், அதன் காரணமாக கடுமையான வயிற்று எரிச்சல் உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து சுரேஷ் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். கோவையில் டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது, சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்த எம்.பாலாடா கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சுரேஷ் சாவில் மர்மம் இருப்பதாக எமரால்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது போலீசார் சம்பவம் நடந்தது ஊட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டதால், அங்கு சென்று புகார் அளிக்கும் படி தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் சுரேஷ் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கரனிடம் புகார் மனு அளித்தனர். மேலும் போலீசாரிடம் சுரேஷ் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். அதற்கு போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.