தேனி, கம்பத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி, கம்பத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஊதியக்குழுவை உடனே அமல்படுத்தி சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், சத்துணவு திட்டத்தில் ஒரே பள்ளியில் பதவி உயர்வு இன்றி பணிபுரிந்த சத்துணவு ஊழியர்களுக்கு தேக்க நிலை சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட இணைச்செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முகமதுஅலி ஜின்னா மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதே போல் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட துணை பொறுப்பாளர் கிருபாபதி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஊதியக்குழுவை உடனே அமல்படுத்தி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், சத்துணவு மையங்களுக்கான கியாஸ் சிலிண்டரை அரசே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.